Skip to main content

பேருந்து இருக்கையில் அமர்வதில் ஏற்பட்ட சண்டை... ஒருவர் மரணம், 3 பேர் கைது!

Published on 10/07/2021 | Edited on 10/07/2021

 

Fight in the seat of the bus ... One passed, 3 arrested

 

சிதம்பரம் அருகே பெரியகுமட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடாஜலபதி (51). இவர் ஜூலை 8ஆம் தேதி அரசுப் பேருந்தில் கடலூரிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.  அதே பேருந்தில் பயணம் செய்த சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த அருள்தாஸ் (45), ரவி (52), வேணுகோபால் (45) மூவரும் குடிபோதையில் வெங்கடாஜலபதியிடம் பேருந்து இருக்கையில் அமர்வது தொடர்பாக வாய்த் தகராறு ஏற்பட்டு அடித்துள்ளனர்.  

 

B.முட்லூர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி வீடு சென்ற வெங்கடாஜலபதி, தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியதன் பேரில் பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக உறவினர்கள் அழைத்து சென்றுள்ளனர். அப்போது பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டார் என கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து வெங்கடாஜலபதியின் மனைவி லட்சுமி கொடுத்த புகாரில் பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் கொலை வழக்குப் பதியப்பட்டு, அருள்தாஸ், ரவி, வேணுகோபால் மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்! 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Govt Bus Driver Conductor incident information released in the investigation

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பழைய பாலக்கரை பகுதியில் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு நகரப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது 8 பேர் கொண்ட இளைஞர் கும்பல் ஒன்று இந்த பேருந்தை வழிமறித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுட்டனர். மேலும் ஆத்திரமடைந்த இளைஞர்கள் பேருந்துக்குள் சென்று ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஓட்டுநரை பேருந்துக்கு வெளியே இழுத்து வந்து அவரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதனை தடுக்க முயன்ற நடத்துநர் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அருகில் இருந்தவர்கள் இதனை தடுக்க முயன்ற போது இந்த இளைஞர்கள் அவர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து தாக்கியுள்ளனர். அதே சமயம் அந்த வழியே வந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இருவர் இந்த சம்பவத்தை படம் எடுத்தபோது அவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் இருவர் என 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 6 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேரும் கஞ்சா போதையில் இருந்தனர் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.  இத்தகைய சூழலில் மேலும் 4 பேரை  போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.