
கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகில் உள்ள வையங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சசிகுமார் (31). இவரது மனைவியின் தங்கையான 15 வயது சிறுமியைக் கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சசிகுமார் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதை வெளியில் யாரிடமும் கூறினால் உன்னை கொன்று விடுவேன் என்று பயமுறுத்தி அதே போன்று பல முறை அந்த சிறுமியிடம் தவறாக நடந்துள்ளார்.
இதனால், சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். இதையறிந்த அந்த சிறுமியின் தாய், விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் மகளிர் போலீஸார் சசிக்குமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதுகுறித்து தகவலறிந்த சசிகுமார் தப்பித்துத் தலைமறைவானதோடு வெளிநாடும் சென்றுவிட்டார்.
இதற்கிடையே கர்பமான சிறுமிக்குக் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தை அரசுத் தொட்டில் குழந்தை திட்டத்தில் கொடுக்கப்பட்டு தற்போது வளர்ந்து வருகிறது. இந்த நிலையில் வெளிநாட்டிலிருந்த சசிகுமார் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஊர் திரும்பி வந்துள்ளார். ஆனால், சொந்த ஊருக்கு வராமல் சென்னை மேடவாக்கம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கிக் கொண்டு சென்னையிலேயே சுற்றிக் கொண்டு இருந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் சென்னைக்குத் தேடிச் சென்று சசிகுமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.