ஏற்காடுக்கு சுற்றுலா வந்த சென்னையைச் சேர்ந்த தந்தையும், மகளும் அருவி பாறை மீது ஏறியபோது கீழே சறுக்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னை மந்தைவெளியைச் சேர்ந்தவர் பாலமுரளி (43). ஐடி நிறுவன ஊழியர். இவருடைய மனைவி சுந்தரலட்சுமி (41). இவர்களுக்கு சவுமியா (13), சாய் ஸ்வேதா (3) ஆகிய இரு பெண் குழந்தைகள் உள்ளனர். சவுமியா, சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார்.
பள்ளி விடுமுறையையொட்டி பாலமுரளி குடும்பத்துடன் ஏப். 28ம் தேதி சேலம் மாவட்டம் ஏற்காடுக்கு சுற்றுலா வந்திருந்தார். அங்கு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியபடியே பல்வேறு இடங்களைச் சுற்றிப்பார்த்தனர்.
மே 1ம் தேதி மதியம், ஏற்காட்டில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ள நல்லூர் அருவிக்குச் சென்றனர். அருவியில் மகள் சவுமியாவுடன் குளித்துக் கொண்டிருந்தபோது அவர் திடீரென்று பாறை மீது ஏறினார். அவருக்கு உதவியாக தந்தையும் பாறை மீது ஏறினார்.
அப்போது திடீரென்று கால் இடறி, அவர்கள் இருவருமே பாறையில் இருந்து கீழே சறுக்கி விழுந்தனர். 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததில் இருவரும் தலையில் பலத்தக் காயம் அடைந்து, நிகழ்விடத்திலேயே பலியாயினர்.
தகவல் அறிந்த ஏற்காடு காவல்நிலைய காவல்துறையினர் சடலங்களை கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.