Published on 11/03/2022 | Edited on 11/03/2022

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே இருங்களூர் ஊராட்சி பகுதியில் வசித்துவந்தவர் பிலவேந்திரன்(56). விவசாயியான இவர், ஆடு, மாடுகளை வைத்து பராமரித்து வந்துள்ளார். இன்று காலை வழக்கம்போல் அவரது கால்நடைகளுக்கு உணவு சேகரிக்க, திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை சாலையோரத்தில் உள்ள மரத்தில் ஏறி அதன் கிளைகளை வெட்டியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரக்கம்பி மீது வளர்ந்திருந்த மரக்கிளையை வெட்டியுள்ளார். அப்போது மரக்கிளை மின்சார கம்பி மீது உரசி பிலவேந்திரன் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதையடுத்து, மரத்தில் இருந்து கீழே விழுந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த சமயபுரம் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.