பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜுலை 5ம் தேதி சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டருகே கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தமிழகத்தையே புரட்டிப்போட்டது. ரவுடிகள் அட்டகாசத்தால் சட்ட ஒழுங்கு பெரிதும் கேள்விக்குறியான நிலையில் சென்னையில் ரவுடிகள் ஒழிப்பு வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. இதற்காக சென்னையின் புதிய கமிஷனராக ஏடிஜிபி அருண் நியமிக்கப்பட்டார். ஐபிஎஸ் அதிகாரி அருண் பதவியேற்ற நாளில் இருந்தே.. ரவுடியிசத்தை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பிரபல ரவுடி திருவேங்கடம் கடந்த ஜூலை மாதம் போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக, வட சென்னையை கலக்கிய பிரபல ரவுடி காக்காதோப்பு பாலாஜி மற்றும் சீசிங் ராஜா உள்ளிட்டோர் அடுத்தடுத்து என்கவுண்டர் செய்யப்பட்டனர். இந்த 3 ரவுடிகளையும் பிடிக்கச் சென்ற போலீஸார் மீது தாக்குதல் நடத்திய காரணத்தால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
அந்த வகையில், போலீஸாரால் அண்மையில் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட காக்கா தோப்பு பாலாஜியின் நெருங்கிய கூட்டாளியும், நண்பருமான 'ஏ பிளஸ்' வகையை சேர்ந்த பிரபல ரவுடி சி.டி.மணியை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். அதன்படி, சி.டி.மணி சேலத்தில் பதுங்கியிருப்பதாக வந்த தகவலை அடுத்து.. கடந்த 21ஆம் தேதி இரவு சேலம் சென்ற சென்னை போலீசார்.. அங்கு பதுங்கியிருந்த சி.டி.மணியை துப்பாக்கி முனையில் அதிரடியாக கைது செய்தனர்.
ரவுடி மணிகண்டன் என்ற சிடி மணி சென்னை தேனாம்பேட்டை, சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர். ஏ பிளஸ் ரவுடியான இவர் மீது 8 கொலை வழக்குகள் உட்பட 33 குற்ற வழக்குகள் உள்ளன. 5 முறை குண்டர் சட்டத்தில் சிறை சென்றவர். தி.நகர் பஜாரில் சிடி கடை வைத்திருந்ததால் இவருக்கு சிடி மணி என்ற அடைமொழி வந்தது. இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். பல்வேறு கொலை ,கொள்ளை வழக்குக்களில் தொடர்புடைய சிடி மணிக்கு எதிரிகள் அதிகம். சில ஆண்டுகளுக்கு முன்பு கூட அவர் சென்ற கார் மீது வெடிகுண்டு வீசி கொலை முயற்சியும் நடந்தது.
இதனால் உயிர்பயத்தில் இருந்துவந்த சிடி மணி தன்னை பாதுகாத்துக்கொள்ள பல கோடிகளை செலவு செய்து பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தியுள்ளார். சென்னையில் உள்ள தனது சொகுசு பங்களா முழுவதும் சிசிடிவி கேமராவை பொருத்தி அதை தனது மொபைல் போனுடன் இணைத்து யார் யார் தனது வீட்டை நோட்டம் விடுகிறார்கள் என்று கண்காணித்துவந்துள்ளார். இதற்கெல்லாம் உட்சபட்சமாக பத்துக்கோடி ரூபாய் செலவில், தனது சொகுசு கார் ஒன்றை புல்லட் புரூப்பாக மாற்ற டெல்லியை சேர்ந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ததும் தெரியவந்தது.
அதே நேரம், ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பிறகு.. கடந்த இரண்டரை மாதத்தில் 300-க்கும் மேற்பட்ட ரவுடிகள் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கை சென்னையில் முடுக்கி விடப்பட்டுள்ளது. இதனால் அச்சமடைந்த சென்னையின் முக்கிய ரவுடிகள்.. காவலருக்குப் பயந்து தலைமறைவு வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். இந்த சூழலில், சேலத்தில் கைது செய்யப்பட்ட சிடி மணி.. விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். இதனிடையே, கைது நடவடிக்கையின் போது போலீசாரிடம் இருந்து தப்பியோடிய சிடி மணி.. திடீரென கீழே விழுந்ததால் அவருக்கு வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்து தண்டனை கைதிகளுக்கான வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதற்கிடையே சி.டி மணியின் தந்தை பார்த்தசாரதி கண்ணீர் மல்க கூறுகையில், ‘சேலத்தில் எந்தவித குற்றச்செயல்களிலும் ஈடுபடாமல் சி.டி. மணி குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். வழக்குகளில் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகி வரும் நிலையில் போலீஸார் அவரை கைது செய்துள்ளனர். பல ரவுடிகள் என்கவுண்டர் செய்யப்பட்டு வருவதால், எனது மகன் தற்போது எங்கே உள்ளார்? என்ற விவரங்கள் தெரியாமல் உள்ளது. சி.டி. மணியின் உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்’ எனத் தெரிவித்தார்.