திருச்சி மத்திய மண்டலத்திற்கு புதிய டிஐஜியாக பொறுப்பேற்ற டிஐஜி.,பாலகிருஷ்ணன் சட்ட ஒழுங்கை கட்டுக்குள் கொண்டு வரவேன் என பொறுப்பேற்ற போது பத்திரிகையாளர்கள் சந்திப்பில் சொன்னார்.
சொன்னது போன்றே அடுத்த சில நாட்களில் எடுத்த அதிரடி நடவடிக்கையால் ஒரே நாளில் 10 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். ரவுடிகளுக்கு உதவுகிறவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஐஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருச்சி சரகத்துக்கு உட்பட்ட அனைத்து ரவுடிகளின் நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்த டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து திருச்சி சரகத்துக்குட்பட்ட திருச்சி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 8ம் தேதி இரவு முதல் 9ம் தேதி இரவு வரை போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதில் திருச்சி மாவட்டத்தில் 2 ரவுடிகள், புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 ரவுடிகள், கரூர் மாவட்டத்தில் 2 ரவுடிகள், பெரம்பலூர் மாவட்டத்தில் 1 ரவுடி என ஒரே நாளில் 10 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது திருச்சி மாவட்டம் சமயபுரம் மற்றும் கல்லக்குடி போலீஸ் நிலையங்களிலும், புதுக்கோட்டை நகரம் மற்றும் கணேஷ்நகர் போலீஸ் நிலையங்களிலும், கரூர் மாவட்டத்தில் குளித்தலை மற்றும் வாங்கல் போலீஸ் நிலையங்களிலும், பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் போலீஸ் நிலையத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு 8 பேர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 2 பேர் மீது நன்னடத்தை பிணையம் பெற வருவாய் கோட்டாட்சியருக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து டிஐஜி., பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ரவுடிகள் மீது மட்டும் அல்லாமல் அவர்களுக்கு உதவுகிற நபர்கள் மீதும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். சமூக விரோத செயல்கள் மற்றும் ரவுடியிசத்தில் ஈடுபடுபவர்கள் பற்றி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டியது பொதுமக்களின் கடமை. தகவல் கொடுப்பவர்களின் விவரம் பற்றிய ரகசியம் பாதுகாக்கப்படும். ரவுடிகள் மீதான நடவடிக்கை தொடரும். அதேநேரம் அவர்கள் மனம் திருந்தி வாழ விரும்பினால் காவல்துறை உதவ முன்வரும்” என்று தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட ரவுகளில் முக்கியமான நபர் பட்டரை சுரேஷ் இவர் மீது கொலை வழக்குகள் முதல் கொள்ளை வழக்குகள் வரை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஐஜேகே கட்சியில் பொறுப்பில் இருப்பதால் நடந்து முடிந்த எம்.பி. தேர்தலில் கட்சி வேலைகள் செய்து கொண்டு இருந்தார். இந்நிலையில் அவரை வாழ்த்தி வீரத்தின் விளை நிலமே என வாழ்த்தி திருச்சி மாநகர் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்ட நிலையில் ரவுடி பட்டியலில் இருந்தால் டிஐஜியின் அதிரடி கைதில் சிக்கி தற்போது சிறையில் இருக்கிறார்.