![ddd](http://image.nakkheeran.in/cdn/farfuture/hGVJ3DRnpBkOKXmxkbcMIEUfOC4LudPrkDfaye9csgg/1618489217/sites/default/files/inline-images/403_18.jpg)
'சுந்தரா டிராவல்ஸ்', 'அடாவடி', 'கேம்' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை ராதா, கணவரை பிரிந்து வாழ்கிறார். தற்போது சென்னை சாலிகிராமம் லோகையா தெருவில் தனது தாயார் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்.
இந்தநிலையில், எண்ணூர் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வரும் வசந்தராஜா மீது சென்னை விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் ராதா ஒரு புகார் அளித்துள்ளார். அதில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டிலேயே தாலி கட்டி திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வருகிறோம். தற்போது தன் நடத்தையில் சந்தேகப்பட்டு அண்மைக்காலமாக தினமும் தன்னை அடித்து, உதைத்துத் துன்புறுத்துகிறார். ஆகவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
![ddd](http://image.nakkheeran.in/cdn/farfuture/maltiejgfJZdBE5gkih7m2EDCs7Kh_O40GLdSQvSjjI/1618489412/sites/default/files/inline-images/405_10.jpg)
வசந்தராஜ் ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். திருவான்மியூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றியபோது நடிகை ராதாவுடன் பழக்கம் ஏற்பட்டது. ராதாவை யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டார். வசந்தராஜ் நடவடிக்கையில் சந்தேகமடைந்த அவரது மனைவி திருவான்மியூர் காவல் நிலையத்திற்குச் சென்று இன்ஸ்பெக்டரிடம் தனது கணவர் குறித்து புகார் அளித்துள்ளார்.
அதற்கு இன்ஸ்பெக்டர், உதவி ஆய்வாளர் மற்றும் அவரது மனைவியை அழைத்துப் பேசி சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளார். நடிகை ராதா உடன் நெருங்கிப் பழகிய விபரம் மனைவிக்குத் தெரிந்ததால், வசந்தராஜ் வடபழனி காவல் நிலையத்தில் பணி மாறுதல் பெற்று வந்துள்ளார். அதன்பிறகு, நடிகை ராதா உடன் மகிழ்ச்சியாக தனது மனைவிக்குத் தெரியாமல் உதவி ஆய்வாளர் வசித்து வந்துள்ளார். அப்போது நடிகை ராதாவுக்கு ரூ.12 லட்சத்தில் சொகுசு கார் ஒன்றும் உதவி ஆய்வாளர் வாங்கிக் கொடுத்ததாகவும், இதுதவிர நடிகை ராதா வீட்டையும் புதுப்பிக்க அவர் பல லட்சம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
![ddd](http://image.nakkheeran.in/cdn/farfuture/I-oejfMg-6Bj8EkJ2ZUe4p2GF-d3Cw6jPmCAdcPUY2U/1618489837/sites/default/files/inline-images/406_11.jpg)
இதற்கிடையே வசந்தராஜ் வடபழனி காவல் நிலையத்தில் இருந்து எண்ணூர் காவல் நிலையத்திற்குப் பணியாற்றச் சென்றார். சினிமா நடிகை என்பதால், ராதாவை தங்களது படங்களில் நடிக்க வரும்படி பலர் அவரது வீட்டிற்கு வந்து சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால், வசந்தராஜ் பிரிந்து செல்ல முயன்றுள்ளார். ஆனால், நடிகை ராதா தனது கணவர் நீங்கள் தான் என்று கூறி உங்களுடன் தான் நான் வாழ்வேன் என்று கூறி வந்துள்ளார். அதற்கு உதவி ஆய்வாளர் மறுத்துள்ளார். நான் உன்னுடன் நெருங்கிப் பழகியதைப் பயன்படுத்தி எனது சொத்தை அபகரிக்கப் பார்க்கிறாய் என்று கூறி தகராறில் ஈடுபட்டு தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்தே நடிகை ராதா காவல் நிலையத்தில், உதவி ஆய்வாளர் வசந்தராஜ் மீது புகார் அளித்துள்ளார் என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
நடிகை ராதா முதல் கணவரை பிரிந்து சென்றபோது, புகார் ஒன்றை அளித்துள்ளார். அதன்பிறகு, தன்னுடன் சேர்ந்து வாழ்ந்துவிட்டு விலகிச் செல்வதாக திருவல்லிக்கேணி தொழிலதிபர் ஒருவர் மீது புகார் அளித்தார். கோடம்பாக்கத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் ஒருவர் மீது புகார் அளித்தார். தற்போது உதவி ஆய்வாளர் மீது புகார் அளித்துள்ளார். இதுகுறித்தும் வடபழனி உதவி கமிஷனரிடம் தெரிவித்துள்ளோம். விரைவில், இருவரையும் அழைத்து கமிஷ்னர் விசாரணை நடத்துவார் என்று தெரிவித்தனர் போலீசார்.