Skip to main content

ஈரோடு பள்ளி மாணவனின் நேர்மை: வியந்த நடிகை குஷ்பு

Published on 14/07/2018 | Edited on 14/07/2018
Erode


ஈரோடு கனிராவுத்தர் குளம் நந்தவன தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பாட்ஷா. இவர் சைக்கிளில் சென்று துண்டு, கைலிகளை வியாபாரம் செய்து வருகிறார். 7 வயதான இவரது 2-வது மகன் முகமது யாசின் சின்னசேமூர் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறான். வழக்கம் போல் சிறுவன் முகமது யாசின் பள்ளிக்கு சென்றான்.
 

 

 

இடைவெளி சமயத்தில் பள்ளியில் பகல் 11 மணியளவில் வெளியே வந்த மாணவன் கண்ணில் ரோட்டில் 500 ரூபாய் கொண்ட பணம் கட்டு கிடந்தது தெரிய வந்தது. அதை எடுத்து தனது ஆசிரியை ஜெயந்தி பாயிடம் ஒப்படைத்தார். ரோட்டில் கிடந்தது டீச்சர். யாருதுன்னு தெரியாது என்று கூறியிருக்கிறான். அந்த பணத்தை எண்ணிப் பார்த்தபோது அதில் ரூ.50 ஆயிரம் இருந்தது. பிறகு அரசு பள்ளியின் ஏற்பாட்டின்படி மாணவன் முகமது யாசினை ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர்.
 

அங்கு எஸ்.பி.சக்திகணேசனிடம், நடந்தை தெரிவித்து பணத்தை ஒப்படைத்திருக்கிறார்கள். மாணவனின் நேர்மையான செயலை கண்ட எஸ்.பி. சக்தி கணேசன் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலேயே பாராட்டு விழா நடத்தினார். அதோடு அல்லாமல் மாணவரின் அண்ணன் முகமது ஜமில் (13) அதே பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கிறான். அவனையும் எஸ்.பி. அலுவலகத்துக்கு வரவழைத்தார். அண்ணன்-தம்பி இருவருக்கும் சீருடை, புத்தகப்பை மற்றும் ஷூ போன்ற பொருட்களையும் வழங்கி பாராட்டு சான்றிதழையும் வழங்கினார். மாணவனின் நேர்மையை அவன் படிக்கும் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், சக மாணவ- மாணவிகள் பாராட்டினர். சமூக வலைதளங்களிலும் இந்த செய்தி பரவியது. பலரும் பாராட்டு தெரிவித்து வந்தனர்.
 

kushboo


இந்தநிலையில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு, தனது மேனேஜர் மூலமாக ஈரோட்டில் உள்ள மாணவனின் பெற்றோரிடம் செல்போனில் பேசினார். உங்கள் மகனின் நேர்மை மகத்தானது. அவனுக்கு படிப்பு செலவுக்கு உதவ நான் தயாராக இருக்கிறேன். எவ்வளவு பணம் வேண்டும்? என்று கேட்டுள்ளார்.
 

 

 

அதற்கு மாணவனின் தந்தை பாட்ஷா, ‘‘என் மகனை அரசு பள்ளியில்தான் சேர்த்துள்ளேன். அவனது படிப்பு செலவுக்கு பணம் தேவைப்படாது. அவனை தொடர்ந்து அரசு பள்ளியில்தான் படிக்க வைக்க விரும்புகிறேன். உதவி செய்வதாக கூறிய உங்களுக்கு நன்றி’’ என்று கூறினார்.
 

வேண்டாம் என்று பெருந்தன்மையோடு கூறுகிறீர்கள். அதனை நான் பாராட்டுகிறேன். உங்கள் மகன் முகமது யாசினிடம் பேசலாமா என்று குஷ்பு கேட்டதற்கு, இதே பேசுங்கள் என்று போனை முகமது யாசினிடம் கொடுத்துள்ளார் பாட்ஷா. முகமது யாசினுடனும் போனில் பேசி அவனையும் பாராட்டி வாழ்த்து கூறினார்.
 

 


 

சார்ந்த செய்திகள்