கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 5 பெண்கள் உட்பட 58 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்தச் சம்பவத்திற்கு இரங்கல்கள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் மறுபுறம் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் போதை ஆசாமிகளின் வீடியோக்கள் வைரலாகி வருகிறது. சென்னை தாம்பரம் அடுத்துள்ள மாடம்பாக்கம் பிரதான சாலை பகுதியில் அமைந்துள்ளது நூற்றாஞ்சேரி. இந்தப் பகுதியில் உள்ள ஜோதி நகர் என்ற இடத்தில் நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் உணவகத்திற்கு சென்ற இளைஞர் ஒருவர் உணவகத்திலேயே மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து உணவகத்தில் ஆம்லெட் கேட்டுள்ளார். உணவக ஊழியர்கள் ஆம்லெட் தராததால் ஆத்திரமடைந்த போதை நபர், மாடம்பாக்கம் பிரதான சாலையில் உருண்டு புரண்டு அட்ராசிட்டி செய்தார். இளைஞர் ஒருவர் மது போதையில் நடு சாலையில் அமர்ந்திருப்பது குறித்து தகவலறிந்து அங்கு வந்த சேலையூர் காவல் நிலைய இரவு நேரக் காவலர் கந்தன் அவரை அப்புறப்படுத்த முயன்றுள்ளார். அப்போது காவலரை காலால் தாக்கி, போதை இளைஞர் அட்டகாசம் செய்யும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகியது.
அதேபோல் சேலத்தில் போதை ஆசாமி ஒருவர் பட்டப்பகலில் வெயில் கொளுத்தும் வேளையில் சிறிதும் சலனமின்றி நடு சாலையில் போக்குவரத்திற்கு இடையூறு செய்யும் வகையில் படுக்கை விரித்து படுத்திருக்கும் காட்சிகள் வைரலாகி வருகிறது. சாலையில் சென்ற ஒருவர் கூட பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், அவரை அகற்ற முயலாமல் செல்லும் காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளது.