
தமிழ்நாட்டில் தொடர்ந்து பல்வேறு சம்பவங்களில் போலீஸாரை தாக்கிவிட்டு தப்பியோடும் குற்றவாளிகளை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துவருகின்றனர். அந்தவகையில், தூத்துக்குடியில் வழக்கறிஞர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜெயப்பிரகாஷை இன்று பிப்.12ம் தேதி போலீஸார் சுட்டுப் பிடித்துள்ளனர்.
முத்துக்குமார் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜெயப்பிரகாஷ், தலைமறைவாக இருந்த நிலையில், இன்று தட்டப்பாறை அருகே காட்டுப்பகுதியில் அவரை காவல்துறையினர் கண்டறிந்து அவரை பிடிக்க முயன்றனர். அப்போது, அவர் காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்ப முயன்றார். அப்போது காவல்துறையினர் அவரை காலில் சுட்டுப் பிடித்துள்ளனர்.
இதில், குற்றவாளி ஜெயப்பிரகாஷ் தாக்கியதில் உதவி காவல் ஆய்வாளர் ராஜா பிரபு மற்றும் காவலர் சுடலைகண்ணு ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. குற்றவாளி ஜெயப்பிரகாஷ் உட்பட காயம் அடைந்த இரு காவலர்களும், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. மேலும், சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் காவலர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்துவிட்டு, காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “உதவி ஆய்வாளர் ராஜா பிரபு மற்றும் சுடலைகண்ணு ஆகியோரும் சம்பவ இடத்திற்கு சென்று குற்றவாளியை பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால், அவர் கைதுக்கு ஒத்துழைக்காமல் போலீஸ் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். முதலில் காவலர் சுடலைகண்ணுவை தாக்கியுள்ளார். அதில் அவருக்கு வெட்டு காயம் ஏற்பட்டு, ஐந்து தையல் போடப்பட்டுள்ளது. அப்போது எஸ்.ஐ. ராஜா பிரபு குற்றவாளியை எச்சரித்துள்ளார். ஆனால், அப்போது அந்தக் குற்றவாளி ராஜா பிரபுவையும் தாக்கியுள்ளார். அந்த சூழ்நிலையில், வேறு வழியில்லாமல், குற்றவாளியை எச்சரித்துவிட்டு காலுக்கு கீழ் சுட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.