கடலூர் மாவட்டத்திலுள்ள ராணுவ வீரர்கள், ஓய்வுபெற்ற முன்னாள் ராணுவ வீரர்களுக்கான ராணுவ கேண்டீன் கடலூர் புதுப்பாளையத்தில் இயங்கிவருகிறது. 4,000 முன்னாள் ராணுவ வீரர்கள் இதில் அட்டை பெற்று, இதன்மூலம் தங்கள் குடும்பத்திற்கு வேண்டிய மளிகைப் பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்களைக் குறைந்த விலையில் வாங்கி பயன்பெறுகின்றனர். மேலும், இதில் ராணுவ வீரர்களுக்கு என குறைந்த விலையில் உயர் ரக மதுபானங்கள் விற்கப்படுகிறது. அதேசமயம் மதுபானங்கள் குறிப்பிட்ட நாளில் மட்டும் விற்கப்படும்.
இந்நிலையில், கரோனா தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக கடந்த ஒருமாதமாக இந்த ராணுவ கேன்டீன் மூடப்பட்டிருந்தது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டதையடுத்து அட்டைதாரர்களுக்கு வியாழக்கிழமை (24.06.2021) மதுபானம் வழங்கப்படுவதாக குறுந்தகவல் அனுப்பப்பட்டது. அதையடுத்து நேற்று கேன்டீன் திறக்கப்பட்ட நிலையில், 500க்கும் மேற்பட்டோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் அதிக கூட்டம் நிலவியதால் நகராட்சி வருவாய் ஆய்வாளர் பாஸ்கர் மற்றும் சக்திவேல் தலைமையிலான அதிகாரிகள் அந்தப் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
வட்டாட்சியர் பலராமன் தலைமையில் அதிகாரிகள் கேன்டீனிற்கு சீல் வைத்தனர். இதனால் ஆவேசம் அடைந்த முன்னாள் ராணுவத்தினர் அதிகாரிகளிடமும் போலீஸாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து நீண்டநேரம் அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு டோக்கன் விநியோகித்து, முறையாக வரிசையில் நிற்க வைத்து, பொருட்களை வழங்குவது என்று முடிவெடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கேண்டீனுக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டு கரோனா தடுப்பு விதிகளைக் கடைப்பிடித்து மது விற்பனை நடைபெற்றது.
இதேபோல் கரோனா விதிமுறைகளை மீறி கடலூர் முதுநகரில் உள்ள காசுக்கடை தெருவில் ஒரு பாத்திர கடை செயல்படுவதாக நகராட்சி அதிகாரிகள் மற்றும் கடலூர் வட்டாட்சியருக்குத் தகவல் வந்தது. அதனையுடுத்து வட்டாட்சியர் பலராமன் தலைமையில் நகராட்சி வருவாய் ஆய்வாளர்கள் விரைந்து சென்று பாத்திரக் கடையில் விசாரணை நடத்தி, அந்தப் பாத்திரக் கடைக்கு ரூபாய் 5000 அபராதம் விதிக்கப்பட்டது. அதையடுத்து அந்தப் பாத்திரக் கடை உரிமையாளர்களிடம் மீண்டும் விதிமுறைகளை மீறி செயல்பட்டால் கடைக்கு சீல் வைக்கப்படும் என்று எச்சரித்தனர்.
இதேபோல் பெண்ணாடத்தில் நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடப்பதாக திட்டக்குடி வட்டாட்சியர் தமிழ்ச்செல்விக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஆய்வுப் பணியை மேற்கொண்டபோது, பெண்ணாடம் வால்பாறை அருகே உள்ள ஜவுளிக் கடை ஒன்றில் கதவைத் திறந்து வியாபாரம் செய்துகொண்டிருந்தனர். மேலும், கடையில் முகக்கவசம் அணியாமல், தனிமனித இடைவெளியைப் பின்பற்றாமல் வியாபாரம் நடந்துகொண்டிருந்ததைப் பார்த்த அதிகாரிகள் கடையைப் பூட்டி சீல் வைத்தனர்.