செல்லூர் ராஜூ எப்போதும் திருந்தவே மாட்டார் என ஈரோடு கிழக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சாடியுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி.யின் வீடியோவை வெளியிட்டு, “நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர்” எனக் குறிப்பிட்டு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி.யின் வீடியோவை 21.05.2024 அன்று பகிர்ந்திருந்தார். அதே சமயம் இந்த வீடியோவை குறிப்பிட்டு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், ‘அண்ணனுக்கு நன்றி’ எனப் பதிவிட்டிருந்தார். இதற்கிடையே திமுக கூட்டணியில் உள்ள கட்சியினர் யாரையும் அதிமுகவினர் புகழ்ந்து பேசும் வழக்கம் கிடையாது. அப்படி இருக்க வழக்கத்திற்கு மாறாக செல்லூர் ராஜு செயல்பட்டிருப்பது அதிமுக தலைமைக்கு அதிர்ச்சி கொடுத்திருப்பதாகக் கூறப்பட்டது. அதிமுகவின் தலைமையின் மீது ஏதேனும் அதிருப்தி உருவாகியுள்ளதா அந்த அதிருப்தியை வெளிப்படுத்துவதற்காக செல்லூர் ராஜு இப்படி பதிவிட்டுள்ளாரா? என்று அரசியல் வட்டாரங்களில் விமர்சகர்கள் பல்வேறு கருத்துகளை வைத்திருந்தனர்.
அதோடு திமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சியின் பிரபல தலைவரை செல்லூர் ராஜு புகழ்ந்து பேசி இருப்பது கண்டிக்கத்தக்கது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை அதிமுக நிர்வாகிகளின் ஒரு தரப்பு அக்கட்சியின் தலைமைக்குப் புகார் கொடுத்திருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் ராகுல் காந்தியை புகழ்ந்து பதிவிட்ட வீடியோ பதிவை செல்லூர் ராஜு நீக்கியுள்ளார்.
இந்நிலையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களைச் சந்தித்த ஈரோடு கிழக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவனிடம் செய்தியாளர்கள் செல்லூர் ராஜு பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித் அவர், ''அவரை விடுங்க சார். நான் கூட அவரைப் பற்றி பெருமையாக நினைத்தேன். இப்போது பார்த்தால்தான் தெரிகிறது. இவர் திருந்தவே மாட்டார் எனத் தெரிகிறது. ஆற்று தண்ணீர் எப்படி ஆவியா கூடாது எனத் தெர்மாகோலை வைத்து தடுத்தாரோ அதன் பிறகு இப்ப கொஞ்சம் மாறிட்டாரு, புத்தி வந்துருச்சு என்று நினைத்தேன். ஆனால் வாபஸ் வாங்கி விட்டார். அவர் ஒரு பைத்தியம். மதுரையில் ஜெயலலிதா என் மேல கேஸ் போட்டு மதுரையில் கையெழுத்து போட சொன்னார்கள். நான் அங்கு ஹோட்டலில் தங்க வேண்டியதாயிடுச்சு. அப்போ என்ன அடிக்க பொம்பளைகளை எல்லாம் அனுப்பிவிட்டார் செல்லூர் ராஜு. அப்புறம் நம்ம ஆளுங்க எல்லாம் அடிச்சு துரத்தி விட்டுட்டாங்க. அப்புறம் பத்திரிகையில் என்ன சொன்னாருன்னா 'இளங்கோவெல்லாம் எங்களுக்கு வேண்டியவரு. அதனால பொம்பளைங்களை விட்டு நல்லா இருக்காரா எனப் பார்த்துவிட்டு வர அனுப்பினேன்' என்று சொல்கிறார். அவர் எல்லாம் ஒரு லூசு'' என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.