பட்டினிச் சாவுகள் ஏற்படுவதற்கு முன்பாக முடி திருத்தகங்கள் செயல்பட அனுமதிக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா தொற்று தடுப்புக்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து, முடி திருத்தம் செய்யக்கூடிய முடி திருத்தகங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டன. பல்வேறு துறைகளிலும் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளில் சலூன் கடைகளைத் திறக்க தமிழக அரசு அனுமதித்துள்ளது.

இந்நிலையில், அனைத்து முடி திருத்தகங்களையும் திறக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு முடி திருத்துவோர் நலச் சங்கம் சார்பில் அதன் தலைவர் முனுசாமி வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், ஊரடங்கிற்கு முன்னதாக மாதம் 15 ஆயிரம் ரூபாய் வரை வருவாய் ஈட்டி வந்த சுமார் 10 லட்சம் முடி திருத்தும் தொழிலாளர்கள், கடந்த 2 மாதங்களாக எவ்வித வருமானமும் இல்லாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. முடி திருத்த தொழிலாளர்களின் குடும்பத்தினர் சிலர் தற்கொலை செய்யத் தொடங்கியுள்ள நிலையில், பட்டினி சாவினால் பாதிக்கப்படும் முன் அனைத்து சலூன் கடைகளையும் உடனடியாகத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு முடி திருத்த தொழிலாளருக்கும் தலா 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, ஏதேனும் நிபந்தனைகளுடனாவது அனைத்துக் கடைகளும் செயல்பட அனுமதிக்க வேண்டுமென மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. அரசு தரப்பில் அளித்த விளக்கத்தில், சில உள்ளாட்சி பகுதிகளில் கடைகளைத் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பிற பகுதிகளில் உள்ள கடைகளை படிப்படியாக திறப்பது தொடர்பாக அரசு அறிவிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கை மே 28-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.