வேலூரில் ஆண் நண்பருடன் ஆட்டோவில் பயணித்த பெண் மருத்துவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஐந்து பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் வேலூர் ஆட்டோ ஓட்டுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
வட மாநிலத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் தனது ஆண் நண்பருடன் திரையரங்கிற்கு சென்றுவிட்டு, நள்ளிரவு ஒரு மணிக்கு ஆட்டோவில் திரும்பியுள்ளார். அப்போது ஆட்டோவில் ஏறிய நான்கு பேர், பெண்ணையும், அவருடன் வந்த நண்பரையும் கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனர். பின்னர், கத்தி முனையில் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கும்பல், செல்போன் மற்றும் ரூபாய் 40,000 ரொக்கம் உள்ளிட்டவற்றை வழிப்பறி செய்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் கொடுத்த புகார் அடிப்படையில், இரண்டு சிறுவர்கள் உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தலைமறைவாக இருந்த மற்றொரு நபரும் காவலர்களிடம் பிடிபட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து செல்போன், பணம் மற்றும் அவர்கள் பயன்படுத்திய ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பொள்ளாச்சி கொடூரத்தை அடுத்து தமிழகத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் விருதுநகரில் நடைபெற்ற பாலியல் சம்பவத்திலும் பள்ளி சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் வேலூரில் இரவில் செல்லும் ஆட்டோ, பைக் உள்ளிட்ட வாகனங்களின் தணிக்கையைத் தீவிரப்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன் உத்தரவிட்டதைத் தொடர்ந்து போலீசார் அங்கு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அத்தியாவசிய தேவையின்றி ஆட்டோவில் பயணிப்போரை போலீசார் எச்சரித்து அனுப்பினர். ஒரு சிலரின் செயலால் ஒட்டுமொத்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி ஆட்டோ ஓட்டுநர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.