ஈரோடு மாவட்டத்தில், 8,0000 க்கும் மேற்பட்ட விசைத்தறிகள் செயல்படுகிறது. நேரடியாகவும், கூட்டுறவு சங்கங்கள் மூலமும் துணிகளை நெய்து வருகின்றனர். மத்திய பா.ஜ.க.மோடி அரசின் புதிய ஜவுளி கொள்கையால் கடந்த சில மாதமாக நூல் விலை ஏற்ற, இறக்கமாக உள்ளதால், தொடர் நஷ்டத்தை விசைத்தறியாளர்கள் சந்தித்து வருகின்றனர். நூல் விலையை பெட்ரோல், டீசல் விலையைப்போல, தினமும் விலையை நிர்ணயிக்கக்கூடாது. குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை மட்டும், விலையை நிர்ணயிக்க வேண்டும் என கோரி வந்தனர்.
ஆனால், மத்திய அரசின் மூலம் எந்த மாற்றமும் இல்லாததால், துணிக்கான ஆர்டர் எடுக்கும்போது ஒரு விலையும், துணியை நெய்து முடித்த பின் விலை மாற்றமும் ஏற்படுகிறது. இதனால், மீட்டருக்கு மூன்று முதல், நான்கு ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுகிறது. இதனால், பல விசைத்தறியாளர்கள் தொழிலை நடத்த முடியாமல், மூடி உள்ளனர்.
நுால் விலையை குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கவும், விசைத்தறி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கக்கோரியும் சித்தோடு, கவுந்தப்பாடி, சலங்க பாளையம் பகுதிகளைச் சேர்ந்த விசைத்தறியாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விசைத்தறியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் இன்று இரண்டாவது நாளாக நீடித்தது. இதனால் சித்தோடு பகுதிகள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இயங்கும் 25000 விசைத்தறிகள் உற்பத்தியை நிறுத்தி விசைத்தறி கூடங்களை மூடிவிட்டனர். இன்றைய நிலையில் இந்த தொழிலை நம்பியுள்ள ஒரு லட்சம் தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது. எனவே அரசு இந்த விஷயத்தில் சுமூகமான தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று விசைத்தறியாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.