ஈரோடு பழையபாளையம் சுத்தானந்தன் நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீதர், இவருடைய மனைவி நதியா. ஸ்ரீதர் ஈரோட்டில் உள்ள ஒரு ஜவுளி நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். ஸ்ரீதர் குடும்ப செலவிற்காக ஒரு தனியார் நிதி நிறுவனத்தை நடத்திவரும் இரண்டு பேரிடம் ரூ . 40 ஆயிரம் கடன் வாங்கினார். இந்த தொகைக்கு அவர் மாதந்தோறும் பணம் செலுத்தி வந்தார் . இதுவரை ரூ.30 ஆயிரம் பணம் செலுத்தி உள்ளார். மீதி ரூ.10 ஆயிரம் கொடுக்க வேண்டி இருந்தது.
இந்நிலையில் நிதி நிறுவனத்தை நடத்தி வந்தவர்கள் கந்து வட்டி கணக்கிட்டு ஸ்ரீதரிடம் மேலும் ரூ. 30 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று கடும் நெருக்கடி கொடுத்து வந்திருக்கிறார்கள். அதற்கு ஸ்ரீதர் நான் பத்தாயிரம் தான் கொடுக்க வேண்டும் என கூறியிருக்கிறார். நிதி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் ரூ.30 ஆயிரம் கொடுத்தே ஆகவேண்டும் என்று தொடர்ந்து கொலை மிரட்டல் செய்துள்ளனர். இதனால் மன வேதனையில் இருந்த ஸ்ரீதர், வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து ஸ்ரீதரின் மனைவி நதியா ஈரோடு சூரம்பட்டி போலீசில் தனது கணவர் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் செய்தார். அதன்பேரில் சூரம்பட்டி போலீசார் தனியார் நிதி நிறுவத்தை சேர்ந்த உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் என இருவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் நிதி நிறுவன உரிமையாளர் மற்றும் ஊழியரை கைது செய்ய வேண்டும். அதுவரை ஸ்ரீதர் உடலை வாங்க மாட்டோம் என்ற அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஈரோடு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதை ஏற்று போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் ஸ்ரீதர் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் தனியார் நிதி நிறுவனத்தை சேர்ந்த உரிமையாளர் மற்றும் ஊழியர் ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கந்து வட்டி கொடுமையால் ஈரோடு ஜவுளி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது அப்பகுதி மக்களிடம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.