
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரண்யா (35). இவர், மதுரையில் பா.ஜ.க நிர்வாகியாக செயல்பட்டு வந்துள்ளார். இவருக்கும், சண்முகசுந்தரம் என்பவருக்கும் திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். சண்முகசுந்தரம் இறந்துவிட்டதால், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த பாலன் என்பவரை கடந்த 2021ஆம் ஆண்டு சரண்யா இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் இருவரும் தனது குடும்பத்துடன் உதயசூரியபுரம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து, அதே பகுதியில் ஜெராக்ஸ் கடை மற்றும் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்துள்ளனர். இந்த நிலையில், வழக்கம் போல் நேற்று இரவு கடையைப் பூட்டிவிட்டு சரண்யா தனது வீட்டிற்கு தனியாக நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் சிலர், சரண்யாவை பின் தொடர்ந்து அவரின் தலையை தனியாக துண்டித்து கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். இதனையடுத்து, அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த கொடூரக் கொலை சம்பவத்தை அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாலனுக்கு ஏற்கெனவே திருமணமாகி முதல் மனைவி இருக்கும் நிலையில், சொத்து பிரச்சனை காரணமாக இந்த கொலை நடைபெற்றுள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட சரண்யா என்பவர், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வாகனத்தின் மீது காலணி வீசிய வழக்கில் தொடர்புடையவர் என்பது மேலும் விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே, இந்த கொலை சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பா.ஜ.க நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் பட்டுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வந்த நிலையில், கபிலன், குகன், பார்த்திபன் என 3 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர். இதில் கபிலன் என்பவர், பாலனின் முதல் மனைவியுடைய மகன் என்று கூறப்படுகிறது.