
ஈரோடு மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில், மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேபோல், தொடர்ந்து கொலை, கொள்ளை என கிரிமினல் சம்பவங்களில் ஈடுபடும் குற்றப் பின்னணி உள்ள நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில், கடந்த மாதத்தில், ஈரோடு வடக்கு காவல்நிலைய பகுதியில் நடந்த இரட்டைக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளான ரவிசந்திரன் என்கிற வேட்டை ரவி, பத்து என்கிற பத்மநாபன், மதன், லோகேஸ்வரன் என்கிற குட்டச்சாக்கு, அழகிரி ஆகிய ஐவரும் சில நாட்களிலேயே தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
இந்த ஐவர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரையின் பரிந்துரையின் பேரில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் இன்று (17/03/2021) கொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் 1) ரவிசந்திரன் (எ) வேட்டை ரவி, 2) பத்து (எ) பத்மநாபன், 3) மதன், 4) லோகேஸ்வரன் (எ) குட்டச்சாக்கு, 5) அழகிரி ஆகியோரை (குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ்) ஓராண்டுக் காலம் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.
இந்த ஆண்டில் கடந்த மூன்று மாதத்தில் மட்டும் 11 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இவர்கள் ஐவரையும் சேர்த்து ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 16 நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
"தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது தொடர்ந்து குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார் எஸ்.பி. தங்கதுரை.