தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி கடந்த இரண்டு வருடங்களாக தமிழகம் முழுவதும் கோலாகலமாக நடந்து வருகிறது.
நேற்று பாலமேடு ஜல்லிக்கட்டு, இன்று உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு என தொடர்ச்சியாக தைப்பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகிறது. கொங்கு மண்டலத்தில் சென்ற வருடம் முதல் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்க தொடங்கியது. குறிப்பாக ஈரோட்டில் இரண்டாவது வருடமாக ஜல்லிக்கட்டு போட்டி நாளை காலை நடக்க உள்ளது. ஈரோடு அருகே உள்ள பவளத்தாம்பாளையம் என்ற கிராமத்தில் ஏ இ டி என்ற பள்ளி மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை முழுமையாக ஜல்லிக்கட்டு பேரவையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் செய்து வந்தது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 350 காளைகள் கலந்து கொள்வதாக பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதேபோல் 380 மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த போட்டிக்கான ஒட்டுமொத்த ஆயத்த பணிகள் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் செய்துவந்தார். இன்று அவர் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் மைதானம் மக்கள் அமரும் இடம் வாடிவாசல் என அனைத்தையும் பார்வையிட்டார்.