பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117வது பிறந்த நாள் விழா மற்றும் 62வது குருபூஜை ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இன்று (30.10.2024) நடைபெற்று வருகிறது. இதனையொட்டி தமிழக அரசு சார்பில் மு.க. ஸ்டாலின், பசும்பொன்னில் நடைபெற்று வரும் முத்துராமலிங்க தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவில் பங்கேற்றார். அப்போது முதல்வருடன் அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், பெரியகருப்பன் மற்றும் ராஜகண்ணப்பன், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
இதனையடுத்து அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். அப்போது முன்னாள் அமைச்சர்களான செல்லூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர். இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட முத்துராமலிங்க தேவர் மேடையில் சொற்பொழிவு ஆற்றுவதில் மிகச்சிறந்த வல்லமை படைத்தவர். அதனால் தான் அக்காலத்தில் அவருடைய மேடைப்பேச்சைத் தடுக்க வேண்டும் என்ற காரணத்தினால் ஆங்கிலேய அரசு அவருக்கு வாய்ப் பூட்டுச் சட்டம் போட்டது.
வீரம், விவேகம், தன்னடக்கம், தன்னடக்கம், எளிமை போன்ற பண்புகளை ஒட்டுமொத்த உருவமாக முத்துராமலிங்க தேவர் திகழ்ந்தார். பெரும்பான்மையான கிராமத்திற்குச் சொந்தக்காரராக இருந்தால் கூட தன்னுடைய நிலங்களைத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பல்வேறு சமுதாயத்தில் உள்ள ஏழை மக்களுக்கும் நிலத்தைப் பிரித்துக் கொடுத்து வாழ்கையில் ஒளியேற்றிவர் முத்துராமலிங்க தேவர்.
கடந்த 1952ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் ஒரே நேரத்தில் அவர் போட்டியிட்டு இரண்டு தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் செல்வாக்கை நிரூபித்தவர் முத்துராமலிங்க தேவர். தெய்வீக குணமடைய, தேசிய பற்றுடைய முத்துராமலிங்க தேவருடைய ஜெயந்தி விழா, குரு பூஜை விழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் அவரது நினைவிடத்தில் பெருமை சேர்க்கின்ற விதமாக மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளோம் என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” எனப் பேசினார்.