Skip to main content

“விளையாட்டில் சமத்துவம் இருக்க வேண்டும்” - இ.பி.எஸ். அறிவுரை

Published on 24/01/2025 | Edited on 24/01/2025
EPS advice There must be equality in sport 

பஞ்சாப் மாநிலத்தில் 2024-2025ஆம் ஆண்டிற்கான பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான மகளிர் கபடி போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த கபடி வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் இருந்து பெரியார் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், அன்னை தெரசா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து கபடி வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இத்தகைய சூழலில் தான், அன்னை தெரசா பல்கலைக்கழக கபடி வீராங்கனைகளுக்கும், தர்பங்கா பல்கலைக்கழக கபடி வீராங்கனைகளுக்கும் இடையே இன்று (24.01.2025) கபடி போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியின் போது எதிர் அணியினர், அன்னை தெரசா பல்கலைக்கழக அணியின் வீராங்கனை மீது பவுல் அட்டாக் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால், இரு அணிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதனையடுத்து, இரு அணிகளும் நடுவரிடம் சென்று முறையிட்டுள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் நடுவர், அன்னை தெரசா பல்கலைக்கழக வீராங்கனையைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால், இரு அணிகளுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. இரு அணியினரும் அங்கு இருந்த நாற்காலிகளைத் தூக்கி வீசி சண்டையிட்டுக் கொண்டனர். இதனால், அந்த இடமே களேபரமானது. பஞ்சாபில் தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துக்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பஞ்சாபில் நடைபெற்ற பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கபடி போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகள் மீது தாக்குதல் நிகழ்ந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. விளையாட்டில் சமத்துவம் இருக்கவேண்டுமே தவிர சண்டைகள் இருக்கக்கூடாது. தமிழ்நாட்டு பல்கலை. அணியின் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வரும் நிலையில், திமுக அரசு உடனடியாக தலையிட்டு அவரை விடுவிக்க வழிவகை செய்யவேண்டும். மாணவிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்