கடந்த 2006 - 2010 திமுக ஆட்சிக் காலத்தில் சுமார் 44 லட்சம் ரூபாய் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி ஆதிலட்சுமி, நண்பர் சண்முகசுந்தரம் ஆகியோருக்கு எதிராக 2011 ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்பு காவல்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது.
அதேபோல் வருமானத்திற்கு அதிகமாக 76 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது. ஆனால் இந்த வழக்குகளில் விருதுநகர் மாவட்ட நீதிமன்றம் இருவரையும் விடுவித்து உத்தரவிட்டது. இதனையடுத்து கீழமை நீதிமன்றத்தால் முடித்து வைக்கப்பட்ட அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு மீதான வழக்குகளைச் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து கடந்த ஒரு வருடமாக விசாரித்து வந்தார்.
இந்நிலையில் உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று (07.08.2024) பிறப்பித்துள்ள உத்தரவில், “அமைச்சர்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அவர்களை விடுத்து கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு செல்லாது. எனவே இந்த சொத்துக் குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும். இது தொடர்பான விசாரணை நீதிமன்றத்தால் நாள் தோறும் நடத்த வேண்டும். அமைச்சர்கள் இருவரும் செப்டம்பர் 9 ஆம் தேதி (09.09.2024) விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும்” எனத் தெரிவித்தார்.