Skip to main content

துதிக்கை துளை சுருங்கியதால் 'ரிவல்டோ' யானைக்கு சிகிச்சை! - உயர்நீதிமன்றத்தில் வனத்துறை தரப்பு விளக்கம்!

Published on 05/02/2021 | Edited on 05/02/2021


 

ELEPHANT MEDICAL TREATMENT CHENNAI HIGH COURT FOREST


துதிக்கை துளை சுருங்கியதால் பாதிக்கப்பட்ட ரிவல்டோ யானைக்கு சிகிச்சை அளித்தது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் சரணாலயத்திற்கு வெளிப்பகுதியான மசினக்குடி பகுதியில் உலவிவந்த ரிவால்டோ எனும் 40 வயது மதிக்கத்தக்க ஆண் யானையை, யானைகள் முகாமுக்கு அழைத்துச் செல்ல வனத்துறையினர் முயற்சித்தனர் வனத்துறையினர் கட்டுப்பாட்டில் இருந்த அந்த யானை, தப்பித்து மீண்டும் வாழைத்தோப்பு எனும் பகுதிக்குத் திரும்பி விட்டது. இந்நிலையில், யானையைப் பிடிக்க வனத்துறையினருக்குத் தடை விதிக்கக் கோரி, சென்னையைச் சேர்ந்த விலங்குகள் ஆர்வலர் முருகவேல், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ELEPHANT MEDICAL TREATMENT CHENNAI HIGH COURT FOREST


இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வனத்துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளீடர் விஜய் பிரசாந்த், ‘யானையின் துதிக்கை துளை சுருங்கிவிட்டதால், அதற்கு சிகிச்சை அளிக்கவே அதைப் பிடிக்க முயற்சித்துள்ளனர். ஏற்கனவே துளை சுருங்கி உள்ள நிலையில், மயக்க மருந்து செலுத்தினால் மூச்சுத் திணறல் ஏற்படும் என்பதற்காகவே, வழி நெடுக உணவுகள் வைத்து யானையை அழைத்துச் சென்றுள்ளனர். யானைக்கு சிகிச்சை அளிப்பதைத் தடுக்க தொண்டு நிறுவனங்கள் முயற்சித்துள்ளன. வனத்துறை ஊழியர்கள் யானையை மீட்டு சிகிச்சையளிக்க, இரவும், பகலும் கடினமாக உழைத்து வரும் நிலையில், சம்மந்தப்பட்ட யானையின் நிலையை நேரில்கூட பார்க்காமல், விளம்பர நோக்கிற்காக இது போன்ற வழக்கைத் தொடர்ந்துள்ளனர்’ என்று எடுத்துரைத்து, யானை தொடர்பான புகைப்பட ஆதாரங்களையும் தாக்கல் செய்தார். 

 

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், யானைக்கு சிகிச்சை வழங்கியது குறித்து நான்கு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக வனத்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையைத் தள்ளிவைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்