தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு 2 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும். அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் தேர்தல் நடைபெறும். 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெறும். உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை மறுநாள் தொடங்குகிறது. வேட்புமனு கடைசி நாள் செப்.22. வேட்புமனு மீதான பரிசீலனை செப்.23 ஆம் தேதி நடைபெறும். வேட்புமனுவைத் திரும்பப் பெற செப்.25 வரை அவகாசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்தை உடனே அமலுக்கு வந்துள்ளது. தற்பொழுது நடத்தைக்கு வந்துள்ள தேர்தல் விதி வரும் அக்.16 ஆம் தேதிவரை அமலில் இருக்கும். 9 மாவட்டங்களுக்கு தனித்தனியாக 9 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுவர். 41,500 வாக்கு பெட்டிகள் பயன்படுத்தப்பட இருக்கிறது. தேர்தல் பாதுகாப்புப் பணியில் 40,000 போலீசார் ஈடுபட உள்ளனர். உள்ளாட்சித் தேர்தல் பணியில் சுமார் 1.10 லட்சம் பணியாளர்கள் பயன்படுத்தப்படுவர். காலை 7 மணிமுதல் 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும். கரோனா பாதிக்கப்பட்டவர்கள் மாலை 5 மணிமுதல் 7 மணிவரை வாக்குச் செலுத்த அனுமதிக்கப்படுவர்.