வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தலில் 28 பேர் போட்டியிடுகிறார்கள். இதில் பிரதான வேட்பாளர்களை தாண்டி சுயேட்சை வேட்பாளர்களும் களத்தில் தீவிர பிரச்சாரத்தில் உள்ளனர். அதில் தமிழ்நாடு மது அருந்துவோர் மற்றும் விழிப்புணர்வு நலச்சங்கத்தின் தலைவர் செல்லப்பாண்டியனும் போட்டியிடுகிறார்.

இவர் ஜீலை 30ந் தேதி காலை முதல் வேலூர் மாநகரத்தில் மத்திய பேருந்துநிலையத்திற்கு தனது இருசக்கர வாகனத்தில் வந்தவர், பிணம் போல் தன்னை மாற்றிக்கொண்டு, கழுத்தில் மாலை போட்டுக்கொண்டு படுத்துக்கொண்டார், பேருந்துநிலையத்திற்கு வந்தவர்கள், பேருந்தில் இருந்து இறங்கியவர்கள் திடீரென இதனைப்பார்த்தவர்கள், என்ன இது சாலையோரம் பிணம் என திடுக்கிட்டனர், ஆனால் ஒருவர் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார் என்கிற தகவலை கேள்விப்பட்டு, அதுக்காக இப்படியா எனச்சொல்லி நகர்ந்து சென்றனர்.
அதே அலங்காரத்தோடு இருசக்கர வாகனத்தில் ஏறி மாநகரை வலம் வந்து துண்டு பிரச்சுரங்களை வழங்கி, தனக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்கிற நோட்டீஸ்சை வழங்கினார். இந்த வித்தியாசமான பிரச்சாரத்தைப் பார்த்து மக்கள் ரசித்துவிட்டு சென்றனர்.
ஒருப்பக்கம் முதல்வர் எடப்பாடி, திமுக தலைவர் ஸ்டாலின், துணைமுதல்வர் ஓ.பி.எஸ், திமுக இளைஞரணி உதயநிதி, சிபிஎம் பாலகிருஷ்ணன், பாமக அன்புமணி, நாம் தமிழர் கட்சி சீமான் என பல தலைவர்கள் தொகுதிக்குள் வட்டமடித்து பிரச்சாரம் செய்துவரும் நிலையில் மற்றொருபுறம், மக்காபோன், குடுகுடுப்பை, கிளிஜோதிடர் என பல்வேறு கெட்டப்புகளில் வேலூர் தொகுதியில் பிரச்சாரம் களைக்கட்டியுள்ள நிலையில், இதுப்போன்ற அதிரடியான பிரச்சாரமும் தொடங்கியுள்ளது.