திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த நர்சரி பிரைமரி மற்றும் அரசு நிதி உதவி பெறும் தொடக்க நடுநிலை பள்ளிகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்கும் நிகழ்ச்சி திண்டுக்கல்லில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் தமிழகப் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கான அங்கீகாரத்தை வழங்கினார்.
அதன்பின் விழா மேடையில் பேசும்போது, “ஜனவரி 10ஆம் தேதிக்குள் 7,500 பள்ளிகளில் பயிற்சியாளர்களுடன் கூடிய அறிவியல் ஆய்வுக்கூடம் தொடங்கப்படும். ஜனவரி 10ஆம் தேதிக்குள் தமிழகத்தில் 7,500 ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும். நர்சரி பிரைமரி பள்ளிகளுக்கு விரைவில் நிரந்தர அங்கீகாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று கூறினார். இந்த விழாவில் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி, முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், ஆகியோர் கலந்துகொண்டனர்.
அதன்பின் பத்திரிகையாளருடன் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “கரோனா ஒழிப்பு நடவடிக்கையில் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் இறப்பு சதவீதம் குறைந்துள்ளது என்று பிரதமர் மோடி தமிழக அரசைப் பாராட்டியுள்ளார். அதேபோல் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்குவதாகத் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்தில் முன்னேற வேண்டுமானால், கல்வி அறிவு மிகவும் அவசியம். அதனால்தான் தமிழக அரசு, கல்விக்காக அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும், மருத்துவத் துறையில் 7.5% இட ஒதுக்கீடு வழங்கி அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை நனவாகியுள்ளது. நீட் தேர்வில் 52 மதிப்பெண்கள் பெற்றால் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவராகலாம் என்று தமிழக அரசு உதவி செய்து வருகிறது.
இதேபோல் தமிழகத்தில் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பு உருவாக்கித் தரும் முயற்சியை அரசு மேற்கொண்டு வருகிறது. உட்கட்டமைப்பை அதிகரித்து, சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்து வருகிறது. தற்போதைய சூழலில், பள்ளிகள் திறப்பைவிட மாணவர்களின் உயிரே முக்கியம். அதனால், பள்ளி திறப்பு தேதி குறித்து முதல்வரே இறுதியான முடிவு அறிவிப்பார்.
கல்வியாளர்கள், பெற்றோர்கள் ஆகியோரின் கருத்துகளை அறிந்தபிறகு தேதி அறிவிக்கப்படும். ஆன்-லைன் வகுப்புகள் நடத்தி, மாணவர்களிடம் கட்டாயக் கல்வி கட்டணம் வசூலிப்பதாக இதுவரை பத்து பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேறு ஏதேனும் பள்ளிகளில் இதுபோன்று நடப்பது தெரியவந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் ஆசிரியருக்கான காலிப் பணியிடங்கள் எவ்வளவு உள்ளது என்பதை உணர்ந்து அதனை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.