நீலகிரி மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் வனத்துறை அதிகாரிகள் தவிர்த்து வேறு எவரையும் அனுமதிக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீலகிரியில் வனவிலங்குகளையும், இயற்கை வளங்களையும் பாதுகாக்கும் வகையில் 1877ம் ஆண்டு நீலகிரி வன விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் சங்கம் ஆங்கிலேயர்களால் ஆரம்பிக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியரை தலைவராக கொண்ட இந்த சங்கத்தில் குற்றப் பின்னணி உடையவர்கள் உறுப்பினர்களாக உள்ளதாகவும், இது குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் வழக்கறிஞர் சீதாராமன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி கிருபாகரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது,
வன விலங்குகளையும் இயற்கை வளத்தையும் பாதுகாக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட இந்த சங்கத்தின் உறுப்பினர்கள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் நுழைந்து, விலங்குகளை விலங்குகளை வேட்டையாடுவதாக மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் தரப்பில் இந்த சங்கத்தின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்றும் இச்சங்க உறுப்பினர்கள் விருந்தினர்களுடன் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிக்குள் நுழைந்து கேளிக்கைகளில் ஈடுபடுவதாகவும் மாவட்ட ஆட்சியர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நீலகிரி மாவட்டத்தில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் வனத்துறை அதிகாரிகள் தவிர்த்து, வேறு எவரையும் அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட்டார். இதுதொடர்பாக, பொது அறிவிப்பும் வெளியிட வேண்டுமென மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கு விசாரணை அக்டோபர் 3ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.