Skip to main content

கிரிவலப்பாதையில் விரட்டியடிக்கப்பட்ட சாதுக்கள்... இ.பி.எஸ் என்ன ட்ரம்பா?  

Published on 09/09/2020 | Edited on 10/09/2020

 

edappady visit thiruvannamalai

 

கரோனா நோய்ப் பரவல் தடுப்பு குறித்த ஆய்வுக்காகவும், பொதுமக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு செப்டம்பர் 9- ஆம் தேதி  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகை புரிந்தார்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நிகழ்ச்சி காலை 10:30 மணி அளவில் தொடங்கி மதியம் 1.30 மணி அளவில் முடிந்தது. அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்துள்ள திட்டப்பணிகள் குறித்தும் செய்யப் போகின்ற திட்டப்பணிகள் குறித்தும் பேசினார்.

அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை செங்கம் சாலையில் உள்ள சுற்றுலா மாளிகையில் மதிய உணவிற்காகச் சென்றார். அதன்பிறகு, மதியம் 3 மணிக்கு விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் ஆய்வுப் பணிக்காகச் சென்றார். அப்படிச் செல்லும் முன் கிரிவலம் வந்தார்.

முதல்வர் கிரிவலம் வருகிறார் என முன்பே முடிவானது. அதனால் கிரிவலப்பாதை முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. 50 மீட்டருக்கு ஒரு போலீஸ் என்கிற கணக்கில் போலீசார் பாதுகாப்புப் பணியில் நிறுத்தப்பட்டனர். அதோடு கிரிவலப்பாதையில் உள்ள அனைத்துக் கடைகளும் மூடப்பட வேண்டும் என காவல்துறை எச்சரித்ததால் கடைகள் மூடப்பட்டிருந்தன. கிரிவலப்பாதையில் எப்பொழுதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாதுக்கள் நடைபாதையிலும் அங்குள்ள கோயில் வளாகங்களிலும் இருப்பர். பல மாவட்டங்களைச் சேர்ந்த அவர்கள் குடும்பம், உறவுகளை விட்டுவிட்டு அண்ணாமலையாரே கதி என உள்ளனர். இவர்களுக்கு வீடு எல்லாம் கிரிவலப்பாதை நடைபாதை தான். இவர்களுக்கான உணவினை தன்னார்வலர்களும் பக்தர்களும் கொண்டு வந்து தருவர். சில ஆசிரமங்களும் உணவுகளை வழங்கி வருகின்றன. கிரிவலம் வரும் பக்தர்கள் தரும் பணத்தைப் பெற்றுக்கொண்டு இந்தச் சாதுக்கள் அங்கேயே இருப்பர்.

 

edappady visit thiruvannamalai


இந்நிலையில் முதல்வர் கிரிவலம் வருவதை முன்னிட்டு முதல்வரின் கண்களில் சாதுக்கள் மற்றும் பிச்சைக்காரர்கள் படக்கூடாது என காவல்துறையினர், கிரிவலப் பாதையில் இருந்த சாதுக்கள் மற்றும் யாசகர்களை அங்கிருந்து விரட்டி அடித்துள்ளனர். இதனால் இன்று காலை முதல் கிரிவலப்பாதையில் சாதுக்கள் யாரும் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. சாதுக்களுக்காகவும் யாசகர்களுக்காகவும் காலை உணவினை கொண்டுவந்த தன்னார்வலர்கள் மற்றும் பக்தர்கள் அவர்கள் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியாகி விட்டனர். தாங்கள் கொண்டு வந்த உணவுப் பொருட்களை அப்படியே எடுத்துச் சென்றனர்.

நாம் கிரிவலப்பாதையை வலம் வந்தபோது, திருநேர் அண்ணாமலை கோவில் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரேயொரு சாதுவை மட்டுமே கண்டோம். இந்த இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சாதுக்கள் இருப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Ad


முதல்வர் பலத்த பாதுகாப்போடு காரில் கிரிவலம் செல்கிறார், அவரை சாதுக்கள் என்ன செய்துவிடப்போகிறார்கள். யாசகம் பெற்று சிவனே என கிரிவலப்பாதையில் அமர்ந்து கிடப்பவர்களை எதற்காக இங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் எனக் கேள்வி எழுப்புகின்றனர் இந்து அமைப்பினர்.

கடந்த மார்ச் மாதம் பிரதமர் மோடி பிறந்த குஜராத் மாநிலத்துக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வந்தபோது, குடிசைப் பகுதிகள் அதிபர் கண்ணில் படக்கூடாதென சுவர் எழுப்பி மறைத்தனர். அதற்குச் சற்றும் குறைவில்லாதது இந்த நிகழ்வு என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். 

 

 

படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்

 

 

 

சார்ந்த செய்திகள்