கடலூர் மாவட்டம் பெரிய மாவட்டங்களில் ஒன்றாகும். அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக கட்சியில் கடலூர் மாவட்டத்தை கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டமாக பிரித்து கட்சி பணிகளை செய்து வந்தனர். கிழக்கு மாவட்டத்திற்கு தற்போதைய தொழில்துறை அமைச்சர் சம்பத் மாவட்ட செயலாளராகவும், மேற்கு மாவட்டத்திற்கு முன்னாள் கடலூர் எம்பியாக இருந்த அருண்மொழிதேவன் மாவட்டசெயலாளராக இருந்து வந்தனர். அருண்மொழிதேவனுக்கும், அமைச்சர் சம்பத்துக்கும் கோஷ்டி பூசல் அதிமானதால் சம்பத் கலந்துகொள்ளும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அருண்மொழிதேவன் ஆதரவாளர்களான சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ பாண்டியன், காட்டுமன்னார்கோவில் தொகுதி முருகுமாறன், பண்ருட்டி தொகுதி சத்யாபன்னீர்செல்வம்,விருத்தாச்சலம் கலைச்செல்வன் உள்ளிட்டவர்கள் புறக்கணித்து வந்தனர். இந்த பிரச்சனை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணைஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி வரை சென்று பேசிமுடிக்கப்பட்டது.
இதனைதொடர்ந்து அமைச்சர் சம்பத் வகித்துவந்த கனிமவளத்துறையை சட்டஅமைச்சராக உள்ள சிவி சண்முகத்திற்கு கூடுதல் பொறுப்பாக மாற்றப்பட்டு அவரை டம்மியாக்கினார்கள். அதன்பிறகும் அவர்களது கோஷ்டி மோதல் பிரச்சனை தீர்ந்தபாடு இல்லை.
இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியும், ஓபிஎஸ் ஆகியோர் கடலூர் மாவட்டத்தை அதிமுக கட்சியில் மூன்றாக பிரித்து கிழக்கு மாவட்ட செயலாளராக சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ பாண்டியனை தேர்வு செய்துள்ளர். இவர் அமைச்சர் சம்பத்திற்கு எதிர் அணியில் உள்ள அருண்மோழிதேவன் ஆதரவாளர். இவருக்கு சிதம்பரம், புவனகிரி, பண்ருட்டி ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் அதிமுக கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்த அமைச்சர் சம்பத்தை மத்திய மாவட்ட செயலாளராக அறிவித்துள்ளனர். இவர் கடலூர், குறிஞ்சிப்பாடி, நெய்வேலி சட்டமன்ற தொகுதிகள் இவரது கட்டுபாட்டில் இருக்கும் என்று அறிவித்துள்ளனர். மேலும் காட்டுமன்னார்கோவில், திட்டக்குடி, வித்தாச்சலம் ஆகிய சட்டமன்றதொகுதிகளை மேற்கு மாவட்டமாக அறிவித்து மாவட்ட செயலாளராக அருண்மொழிதேவனே தொடர்ந்து உள்ளார்.
அதிமுகவின் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளராக புதிய பதிவியை ஏற்றுள்ள எம்எல்ஏ பாண்டியன் முதல்வர் மற்றும் அதிமுக உயர்மட்ட பொறுப்பில் உள்ளவர்களின் ஆசியை பெற்று சொந்த ஊரான சிதம்பரம் நகருக்கு வருகை தந்தார் இவரை தொகுதியின் எல்லையான பெரியப்பட்டில் அவரது ஆதரவாளர்கள் மேளதாள வானவேடிக்கை முழங்க வரவேற்று அழைத்து வந்தனர். இதனை தொடர்ந்து இவருக்கு மாற்று கட்சிகளை சார்ந்த நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் சால்வை அனிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இதுகுறித்து செய்திளார்களிடம் பேசிய பாண்டியன் சிதம்பரத்தை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று நான் சட்டமன்றத்தில் பேசினேன். அதனை தொடர்ந்து சட்டஅமைச்சர் இதுகுறித்து ஆய்வுசெய்ய உத்திரவிட்டுள்ளார். அதனை தற்போது நேரிலும் அவரிடத்தில் பேசிவிட்டு வந்துள்ளேன். கண்டிப்பாக அதுவிரைவில் நடக்கும் சிதம்பரத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் என்றார்.
அதேநேரத்தில் அதிமுகவில் கடலூர் மாவட்டத்தை மூன்றாக பிரித்ததை கட்சியின் பல்வேறு தரப்பினர்‘ வரவேற்றாலும் அமைச்சர் சம்பத் தரப்பினருக்கு இது ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் ஆதரவாளர்கள் வெளிபடையாகவே பலரிடம் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் கடலூர் மாவட்டத்தில் 32 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இதில் 33 சதவீதத்திற்கு மேல் தலித் மக்கள் வசிக்கிறார்கள். இவர்கள் அரசியலில் அதிமுக, திமுக என இருகட்சிகளில்தான் அதிகம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். திமுகவில் மாவட்டத்தை கடலூர் கிழக்கு, மேற்கு என இரண்டாக பிரித்து கிழக்கு மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சராக இருந்த பன்னீர்செல்வம் உள்ளார். மேற்கு மாவட்ட செயலாளராக முன்னாள் எம்பி மற்றும் எம்எல்ஏவாக இருந்த கணேசன் உள்ளார். இதில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூதாயத்தையும், தலித் சமூதாயத்தையும் சார்ந்தவர்களை மாவட்ட செயலாளராக நியமித்துள்ளனர. இதனை அனைவரும் வரவேற்றுள்ளனர்.
ஆனால் தற்போது மாவட்டத்தை மூன்றாக பிரித்துள்ள அதிமுக மூன்று மாவட்ட செயலாளர்களையும் ஒரே சமூகத்தில் இருந்து நியமித்துள்ளனர். மாவட்டத்தில் 33 சதவீதத்திற்கு மேல் வசிக்கும் தலித் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் விதத்தில் ஒருவரை கூட மாவட்ட செயலாளராக நியமிக்கவில்லை என்று அந்த சமூகத்தில் இருந்து அதிமுகவின் முக்கிய பதவிகளில் உள்ளவர்கள், கட்சியினர் என பலர் நம்மிடம் ஆதங்கத்துடன் கூடிய வருத்ததுடன் பேசினார்கள்.
அதேபோல் சிறுபான்மை என்று சொல்லப்படுகிறவர்கள் மாவட்டத்தில் 15 சதவீதத்திற்கு மேல் உள்ளனர். அந்த சமூகதிலிருந்தும் ஒருவரை கூட நியமிக்கவில்லை என்றும் அந்த சமூகத்தை சார்ந்தவர்கள் புலம்பி வருகிறார்கள்.
இதே அம்மா இருந்தா இப்படி நடக்குமா? என்ற கேள்வி எழுப்பியதுடன் சாதிய அடக்குமுறை அதிகமாக இருந்த காலத்திலும் ஒன்றுபட்ட மாவட்டமாக இருந்தபோது அம்மா தலித் சமூகத்தை சார்ந்தவரை மாவட்ட செயலாளராக நியமித்தார் என்பது குறிப்பிடதக்கது என்றனர். தற்போது ஓபிஎஸ், இபிஎஸ் கையில் கட்சி உள்ள நிலையில் கட்சியின் பதவி மற்றும் முக்கிய பொறுப்புகளில் சமூக நீதி கிடைக்குமா? என்ற கேள்வி எழுப்பியுள்ளனர்.