Skip to main content

'பஸ்போர்ட்' அமைக்க நடவடிக்கை: எடப்பாடி பழனிசாமி பேட்டி

Published on 28/07/2018 | Edited on 28/07/2018
edappadi palanisamy


திமுக தலைவர் கலைஞருக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்க தமிழக அரசு தயாராக இருக்கிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இன்று (ஜூலை 28, 2018) கூறினார்.


சேலம் மாவட்டத்தில் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நான்கு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். விமானம் மூலம் நேற்று காலை அவர் சேலம் வந்தடைந்தார்.


அஸ்தம்பட்டியில் உள்ள ஆய்வு மாளிகையில் இன்று அவர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது:


சேலம் மாவட்டத்தில் வளர்ச்சிக்காக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா பல்வேறு திட்டங்களை வகுத்துத் தந்ததன்பேரில், சேலத்தில் உயர்மட்ட மேம்பாலங்கள் கட்டப்பட்டு, அவை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறந்து விடப்பட்டுள்ளன. சில உயர்மட்ட பாலப்பணிகளின் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. 


சேலம் மாநகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, பொதுமக்கள் எளிதாக பயணம் செய்யும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய 'பஸ்போர்ட்' அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 


திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞர் உடல்நலம் பாதிக்கப்பட்டு, காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு மருத்துவ உதவிகள் தேவைப்படுமாயின் அனைத்து வசதிகளையும் செய்துதர தமிழக அரசு தயாராக உள்ளது. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சார்ந்த செய்திகள்