காவிரி விவகாரம் குறித்து விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்தில் அமைக்க வேண்டும் என்று கடந்த மாதம் 16ம் தேதி மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. ஆனாலும், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்தி வந்தது.
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், தமிழக எம்பிக்கள் ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது மத்திய அரசுக்கு எதிராக அதிமுக சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுபற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் கோவையில் பேசும்போது, `காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நீதிமன்றம் விதித்த கெடு முடியும் வரை பொறுத்திருப்போம்’’ என்றார்.
இதற்கிடையே மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அளித்திருந்த காலக்கெடு இன்றுடன் (வியாழக்கிழமை) முடிவடைவதையொட்டி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம், இன்று தலைமைச் செயலகத்தில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்காக அனைத்து அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்பட உயர் அதிகாரிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்பார்கள் என தெரிகிறது. தலைமைச் செயலகத்தில் பழைய அமைச்சரவை கூட்ட அரங்கத்தில் இந்த கூட்டம் காலை 10 மணிக்கு மேல் நடைபெறுகிறது.
சுப்ரீம் கோர்ட்டு விதித்த காலக்கெடுவுக்குள் அதன் தீர்ப்பை நிறைவேற்றாவிட்டால், சட்டப்பூர்வமாக மத்திய அரசுக்கு எதிராக கோர்ட் அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்ய வழிவகை உள்ளது. அதன்படி, அடுத்தகட்ட சட்டப் பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும் விவசாய சங்கங்களும் வலியுறுத்தியுள்ளன.