





தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை வெள்ள சீரமைப்பு பணிகள் மற்றும் நிவாரண முகாம்களை இன்று (16.10.2024) பார்வையிட்டு ஆய்வு செய்தார். இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் இராமதாசுபுரம் ஈஷா ஏரியை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். மழைநீர் வரத்து பகுதிகளில் தண்ணீர் தடையின்றி வரும் வகையிலும், வெளிப்போக்கி பகுதி மற்றும் கால்வாய்களில் நீர் செல்லும் வகையிலும் தொடர்ந்து கண்காணித்து சீரமைப்பு பணிகளை உடனுக்குடன் மேற்கொள்ளுமாறு நீர்வளத்துறை அலுவலர்களிடம் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, திருநின்றவூர் ஏஞ்சல் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மழைக்கால நிவாரண முகாமில் சுகாதார வசதிகள், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து நேரில் பார்வையிட்டு உறுதி செய்தார். மேலும், நிவாரண முகாமில் தங்கியுள்ள பொதுமக்களுக்கு போர்வை, ரொட்டி உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். நிவாரண முகாமில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமில் மருந்து பொருட்களையும் பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களிடம் தெரிவித்தார்.
தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியம் செம்பரம்பாக்கம் ஏரியினை பார்வையிட்டு, நீர்வரத்து மற்றும் நீர்வெளியேற்றம் குறித்து பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களுடன் ஆய்வு செய்தார். நீர் இருப்பை தொடர்ந்து கண்காணித்து மழைப்பொழிவுக்கு ஏற்றபடி உடனுக்குடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அலுவலர்களிடம் தெரிவித்தார். அதன் பின்னர் செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம், அகரம் தென். கிருஷ்ணாநகர் பகுதியில், மழைநீர் வடிகால் தூர்வாரப்பட்டு வரும் பணியினை பார்வையிட்டார். சென்னை, கோவிலம்பாக்கம் சுண்ணாம்பு கால்வாயில் நேற்றைய தினம் பார்வையிட்டு தெரிவித்த கருத்துகளின் படி, ஆகாய தாமரைகள் அகற்றப்பட்டு நீர் சீராக செல்வதை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பார்வையிட்டு உறுதி செய்தார்.
இந்த ஆய்வுகளின்போது, அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், எஸ்.எம். நாசர், திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர்கள் கு. செல்வப்பெருந்தகை, ஆ. கிருஷ்ணசாமி, எஸ்.ஆர். ராஜா, துணை முதலமைச்சரின் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் க.சு. கந்தசாமி, மாவட்ட ஆட்சித் தலைவர்கள் த. பிரபு சங்கர், கலைச்செல்வி மோகன், ச. அருண் ராஜ், கூடுதல் ஆட்சியர் அனாமிகா ரமேஷ் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.