திண்டுக்கல் மாவட்டத்தில் வத்தலக்குண்டில் நடிகர் ரஜினிகாந்தை கண்டித்து டி.டி.வி ஆதரவாளர்கள் ஒட்டிய கண்டன போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வெளியான தர்பார் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேசும் காட்சியில் சிறைக் கைதிகள் ஷாப்பிங் போவது சகஜம் என்பதைப் போல் ஒரு வசனம் இடம்பெற்றிருந்தது. இந்த காட்சிகள் சிறையில் இருக்கும் சசிகலாவை குறிப்பதுபோல் இருப்பதாக கூறி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் சர்ச்சையை ஏற்படுத்தினர்கள்.
இந்நிலையில் வத்தலக்குண்டில் டி.டி.வி ஆதரவாளர் மணிகண்டன் என்பவர் நகர்ப்பகுதி முழுவதும் கண்டன போஸ்டர் ஒன்றினை ஒட்டி உள்ளார். அதில் பிழைக்க வந்த நீ பிழைத்துகொள், வணிகத்தில் அரசியலை வைக்காதே, மதுரை விமான நிலைய சம்பவத்தை மறந்து விடாதே திருத்திக் கொள் என்பது போன்ற வாசகங்கள் போஸ்டரில் இடம் பெற்றுள்ளன. இந்த போஸ்டர் ரஜினி ரசிகர்கள் மத்தியில் கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் வெளிவந்து, அனைவரும் பார்த்த ஒரு விஷயங்களைத்தான் படத்தில் வைத்திருந்தார்கள். அதுவும் சர்ச்சை கிளம்பியதை அடுத்து உடனடியாக அந்த காட்சிகள் நீக்கப்பட்டு விட்டன. தேவையில்லாமல் எங்கள் தலைவர் ரஜினியை தொடர்ந்து சீண்டினால் தக்க பதிலடி கொடுப்போம் என ரஜினி ரசிகர்கள் கொந்தளித்தும் வருகிறார்கள்.
இந்த போஸ்டர் விவகாரம் வத்தலக்குண்டை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பெரும்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.