
சாலை போடுவதற்கான தாரில் உரிய கமிசன் கொடுக்காததால், தார் கொள்முதலை நிறுத்தி வைத்துள்ளது மாவட்ட நிர்வாகம். இதனைக் கண்டித்து சிவகங்கை நகர தி.மு.க. பேருந்து மறியல் செய்வதாக அறிவித்துள்ளதால் சிவகங்கை மாவட்டத்தில் பரப்பரப்பு நிலவி வருகின்றது.
சிவகங்கை மாவட்டத்தில் 15க்கும் அதிகமான சாலைகளின் நிலை புகைப்படத்தில் இருப்பது போல் தான்.! சிவகங்கை ஒன்றியத்திற்கு உட்பட்ட வேம்பங்குடி,உசிலங்குலம், உடையனாதபுரம், கடுக்காகுலம், மாடக்கோட்டை, உச்சப்புலி, வெல்லஞ்சி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களை ஒன்றிணைக்கும் கீழ்க்கண்டனி டூ வேம்பங்குடி சாலை அமைக்க சமீத்தில் டெண்டர் விடப்பட்டு, சாலை அமைக்கும் பணி துவங்கியது.
கடந்த மூன்று மாத காலமாக வெறும் சரளைக்கற்கள் மட்டுமே பரவலாக நிரப்பப்பட்டு சாலை அமைக்காமலேயே காலம் தாழ்த்தப்படுவதால், பாதசாரிகள் துவங்கி டூவீலர், நான்கு சக்கர வாகனம் வைத்திருப்பவர் வரை சிரமத்திக்குள்ளாகி வருகின்றனர். இதுக்குறித்து உள்ளூர் அதிகாரிகளிலிருந்து மாவட்ட ஆட்சியர் வரை மனுக் கொடுத்துக் காத்திருக்கின்றனர் இக்கிராம மக்கள்.
"ஏறக்குறைய மூன்று மாத காலம் ஆகிவிட்டது இந்த சரளைக்கற்கள் போட்டு.!! ஏன் இந்த சாலை அமைக்கவில்லை என ஒப்பந்தக்காரரிடம் கேட்டால், "இன்னும் சாலைக்கான தார் எங்களுக்கு வரவில்லை." என்கிறார். அதிகாரிகளோ., " தார் கொள்முதலில் மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்ட சதவிகித அளவு கமிசன் கேட்டதால் அதற்கு படியவில்லை தார் நிறுவனம். கமிசனாலாயே தாரை கொள்முதல் செய்யவில்லை மாவட்ட நிர்வாகம். இதனைக் கண்டித்து வருகின்ற 20ம் தேதி பேருந்து மறியலை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்." என்றார் சிவகங்கை தி.மு.க. நகர செயலாளர் ஆனந்த்.