Skip to main content

ரூ.4 கோடிக்கான உத்தரவாதம் செலுத்தி  ‘சக்ரா’ திரைப்படத்தை வெளியிடலாம்! -வழக்கு முடித்துவைப்பு

Published on 21/10/2020 | Edited on 21/10/2020
chennai highcourt chakra vishal movie

 

 

ரூ.4 கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை செலுத்தும் பட்சத்தில், விஷால் நடித்த சக்ரா படத்தை வெளியிடலாம் என,  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

நடிகர் விஷால் - தமன்னா நடிப்பில் வெளியான ஆக்ஷன் என்ற படத்தை,  ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் ரவீந்திரன் தயாரித்திருந்தார். படத்தில் நஷ்டம் ஏற்பட்டால், 8 கோடியே 29 லட்சத்து 57 ஆயிரத்து 468 ரூபாயை திருப்பித்தருவதாகக்கூறி, டிரைடெண்ட் நிறுவனத்தின் ரவீந்திரனுடன்,  நடிகர் விஷால் உறுதி அளித்து ஒப்பந்தம் செய்திருந்தார். ஆனால்,  ஆக்‌ஷன் படத்தால் நஷ்டம் ஏற்பட்ட நிலையில், வாக்குறுதியை நிறைவேற்றாமல், விஷால் இழுத்தடித்தாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே,  இயக்குனர் ஆனந்தன் என்பவர், ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்திற்கு ஒரு கதையைச் சொல்லி,  அதைப் படமாக்க ஒப்பந்தமும் செய்துள்ளார்.

 

தற்போது விஷால் நடிப்பில் "சக்ரா" என்ற படத்தை இயக்குனர் ஆனந்தன் இயக்கி, வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. சமீபத்தில் படத்தின் டீசரும் வெளியிடப்பட்டுள்ளது. தங்கள் நிறுவனத்திடம் கூறிய அதே கதையை,  இயக்குனர் ஆனந்தன், நடிகர் விஷாலை வைத்து, 'சக்ரா' என்ற பெயரில் படம் எடுத்துள்ளதாகவும், அந்த படத்தை,  ஓடிடி-யில் வெளியிட திட்டமிட்டுள்ளதால், படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரி,   ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.இ.ஆஷா, ஆக்ஷன் படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில், 8.29 கோடி ரூபாய்கான உத்தரவாதத்தை,  நடிகர் விஷால் அளிக்க வேண்டும் என்றும், எந்த வகையில் உத்தரவாதம் அளிக்கப் போகிறார் என்பது குறித்தும்,  அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார்.

 

இந்த வழக்கு, நீதிபதி ஆஷா முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, விஷால் தரப்பில், ஆக்ஷன் படத்தை வெளியிட்டத்தில் வசூலானதாகக் கூறும் தொகை தவறானது என்றும், குறைந்தபட்ச உத்தரவாத அடிப்படையிலேயே ஒப்பந்தம் போடப்பட்டதாகவும், அதனால் வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனத் தெரிவிக்கப்பட்டது.

 

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், இரண்டு வாரத்தில் 4 கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை விஷால் தாக்கல் செய்ய வேண்டும்.  அவ்வாறு தாக்கல் செய்த பின்னர்தான், சக்ரா படத்தை வெளியிட வேண்டும்.  படத்தை வெளியிட்ட இரண்டு வாரத்தில், மீதமுள்ள 4 கோடியே 29 லட்சத்து 57 ஆயிரத்து 648 ரூபாய்க்கான உத்தரவாதத்தை தாக்கல் செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில், மத்தியஸ்தரை டிசம்பர் 23-ஆம் தேதிக்குள் நியமிக்கும் நடவடிக்கைகளை, டிரைடெண்ட் ஆர்ட்ஸ் மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில், மத்தியஸ்தர் உரிய முறையில் தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தி, வழக்கை முடித்து வைத்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரத்னம் பட ப்ரமோஷன்; வீதி வீதியாக சென்று ஆதரவு கோரும் இயக்குநர் ஹரி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Director Hari goes from street to meet people for the promotion of Rathnam movie

நடிகர் விஷால் நடித்துள்ள ரத்னம் திரைப்படம் நாளை வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது. இதயொட்டி அப்படத்தின் இயக்குநர் ஹரி இன்று வேலூர் விருதம்பட்டில் உள்ள திரையரங்கில் ரசிகர்களை சந்தித்தார் அப்போது படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது.

முன்னதாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வேலூர் எனக்கு சென்டிமென்ட்டான ஊர் இங்கிருந்து தான் திரைக்கதைகளை எழுதுவேன். எனக்கும் வேலூருக்குமான நெருக்கம் அதிகமாக உள்ளது. ரத்தினம் என்னுடைய 17 வது படம் நடிகர் விஷாலை வைத்து இயக்கும் மூன்றாவது படமாகும் இப்படம் வெற்றி பெறும். வழக்கமாக எனது படம் பல மாவட்டங்களை சார்ந்திருக்கும். வட மாவட்டங்களை மையகப்படுத்தி படம் ஒன்று இயக்க திட்டமிட்டேன்.

அதன்படி ஆந்திரா - தமிழக மாவட்ட எல்லையான வேலூர் மாவட்டத்தில் இப்படத்தை இயக்கி உள்ளேன். மாநில எல்லைகளின் பிரச்சினை இந்த படத்தில் காட்டி இருப்பேன். இளைஞர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் குடும்பப் பாங்காகவும் அமைந்துள்ளது. பழைய படங்கள் மீண்டும் ரிலீஸ் ஆவது மகிழ்ச்சி அளிக்கிறது. பழைய படத்திற்கு ஆதரவு அளிக்கும் போது எங்களை மென்மேலும் ஊக்குவிக்கிறது. மீண்டும் நாங்கள் தரமான படங்கள் இயக்குவதற்காக எங்களை பணி செய்ய வைக்கிறீர்கள்” என்றார்.

Director Hari goes from street to meet people for the promotion of Rathnam movie

ரத்னம் ட்ரெய்லரில் கெட்ட வார்த்தை இடம் பெற்றிருப்பது குறித்து கேட்டதற்கு, “படத்துக்கு தேவை என்பதால் மட்டுமே சில கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தப்படுகிறது. இது படத்தின் தேவையை கருதியே பயன்படுத்துகிறோம். மேலும் பொது மக்களுக்கு மிக நெருக்கமாக ரியாலிட்டியுடன் எடுக்க வேண்டும் என்பதால் இத்தகைய போக்கை கடைபிடிக்கிறோம். எனது கடந்த படமான யானை படத்துக்கு இங்கு வந்திருந்தேன். படம் வெற்றி பெற்றது இந்த படமும் மிகப்பெரிய வெற்றி பெறும். ரத்தினம் படம் தமிழகத்தில் 750 ஸ்கிரீன்களில் வெளியிடப்படுகிறது. மக்களுக்கு நல்லது செய்வதற்காக நடிகர்கள் சினிமாக்கு வருவது சந்தோசம் தான்.

என்னுடைய படங்களில் குடும்ப செண்டிமெண்ட் கட்டாயமாக இருக்கும். இதுவே நமது கலாச்சாரமாக எண்ணி அனைத்து படத்திலும் அதை வலுவாக வைத்துள்ளேன். கில்லி படம் ரீ ரிலீஸ் ஆகி மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. அதை பார்க்கும்போது எனக்கும் ஆசையாக உள்ளது எனது படத்தையும் ரீலீஸ் செய்ய வேண்டும் என்று இதற்கு தயாரிப்பாளர் முடிவு செய்ய வேண்டும். மீண்டும் போலீஸ் கதையாம்சம் கொண்ட படத்தை இயக்க திட்டம் வைத்துள்ளேன்” என்றார்.

லோகேஷ் யுனிவர்ஸ் போன்று ஹரி யுனிவர்ஸ் வர வாய்ப்புள்ளதா என கேட்டதற்கு, “அது அவருடைய ஸ்டைல். எனக்கு அதுபோன்ற எண்ணம் இல்லை” என்று பதிலளித்தார்.

வீதி வீதியாக சென்று பொதுமக்களை சந்தித்து பிரமோஷன் தேடுவது குறித்து கேட்டதற்கு, “தேர்தல் சமயத்தில் வேட்பாளர்கள் எங்களுக்கு வாக்களியுங்கள் என்று மக்களை சந்திக்கிறார்களே அதுபோலத்தான் நாங்களும் ஒரு படைப்பை உருவாக்கி அதனை பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்ல இது போன்ற பிரமோஷனை நாடுகிறோம்” என்றார்.

Next Story

ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sharmila handed over to Praveen parent

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணைக் கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்தக் காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால், ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியதோடு கொலைக்கு காரணமான தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஷர்மிளாவின் உடல் உடற்கூராய்வு செய்யப்படும் போது வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இன்று (25.04.2024) வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம் நேரில் விசாரணை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து ஷர்மிளா உடலுக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடைபெற்று நிறைவடைந்த நிலையில் ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.