கடலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் போன்ற மாவட்டங்களில் பெண்களின் கருவில் உள்ள சிசுவின் பாலினத்தைக் கண்டறிந்து கூறும் சட்டவிரோத கும்பலின் நடமாட்டம் அதிக அளவில் இருந்து வருகிறது. இதனால் தர்மபுரி மாவட்டத்தில் ஆண், பெண் பாலின விகிதம் குறைவாக இருப்பதால் இதனை ஈடு செய்யும் வகையில் மாவட்ட ஆட்சியர் சாந்தி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அதனையொட்டி இவரது அறிவுறுத்தலின்படி ஊரக நலப் பணிகள் இயக்குநர் சாந்தி தலைமையிலான குழுவினர் சிசுவின் பாலினத்தைக் கண்டறிந்து கூறும் சட்டவிரோத கும்பல்கள் குறித்துத் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுப் பிடிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களாகவே தர்மபுரியில் கிராமப் பகுதிகளில் பதுங்கி கருவில் இருக்கும் பாலினம் குறித்து கண்டறியும் கும்பல்களை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்த சம்பவங்கள் அரங்கேறி இருந்தது. இந்நிலையில் சட்டவிரோதமாக கருக்கலைப்பில் ஈடுபட்ட பெண்ணை மருத்துவத் துறையினர் கையும் களவுமாக மாடியில் வைத்து பிடித்த சம்பவம் தர்மபுரியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தர்மபுரி மாவட்டம் கிட்டனஹல்லி பகுதியில் சட்டவிரோதமாக கருக்கலைப்பில் ஒரு கும்பல் ஈடுபடுவதாக மாவட்ட சுகாதாரத் துறையின் இணை இயக்குநர் சாந்திக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சாந்தி தலைமையிலான அதிகாரிகள் சென்றனர். கர்ப்பிணிப் பெண் வீட்டிற்கு சென்ற பொழுது அங்கு மாடியில் வைத்தே கருக்கலைப்பு செய்ததாக சேலத்தைச் சேர்ந்த சித்ரா தேவி என்பவரை பிடித்தனர். உடனடியாக பாப்பாரப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, அவரிடம் பிடிபட்ட பெண் ஒப்படைக்கப்பட்டார்.
பிடிபட்ட பெண்ணிடம் மாவட்ட மருத்துவத்துறை அதிகாரி சாந்தி பேசும் காட்சிகளும் வெளியாகியுள்ளது. அதில், ''நீ இதுக்கெல்லாம் பயப்படற ஆளாம்மா. உன்னுடைய வரலாறு தெரிஞ்சிருச்சு. எல்லாமே சொல்லிட்டாங்க உன்னை பற்றி. நீ எவ்ளோ பெரிய டிக்கெட் என்கிறார்கள். அந்த அளவிற்கு ஃபிராடு பக்ரியா இருக்குற. அபார்ஷன் பண்ண பெங்களூரில் இருந்து வந்தியா? எல்லாம் சொல்லியாச்சு.. எல்லாம் ரெக்கார்ட் பண்ணியாச்சு.. எத்தனை மணிக்கு மாத்திரை கொடுத்த, எத்தனை மணிக்கு மருந்து வச்ச எல்லாமே சொல்லியாச்சு. ரொம்ப நல்லவ மாதிரி நடிக்காத. அந்த பிள்ளையின் உயிருக்கு ஆபத்து வந்தா என்ன பண்ணுவ. டாக்டரே முடியாதுன்னு சொல்லிருக்காங்க. அபார்சன் பன்ற அளவுக்கு நீ அவ்வளவு பெரிய ஆளா? உனக்கு என்ன டிகிரி இருக்கு? இது அபார்ஷன் பண்ற இடமா? எவ்வளவு தைரியம் உனக்கு. அபார்ஷன் பண்றதுக்கு 30,000, என்ன குழந்தைனு பாக்குறதுக்கு 15000. இந்த மாதிரி ஒதுக்குப்புறமா வந்துட்டா யாருக்கும் தெரியாது என்று நினைப்பு. மொட்ட மாடில இருந்து தப்பி ஓடலாம் என்று பார்த்தாயா?'' என டோஸ் விட்டார்.