வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் (மானியமில்லாத) விலை நடப்பு மாதத்தில் ஒரேயடியாக 13.50 ரூபாய் உயர்ந்து, 638.50 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வீடுகள் மற்றும் வணிக பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டர்கள் விலைகள் மாதந்தோறும் நிர்ணயிக்கப்பட்டு வருகின்றன. எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு, இதன் விலைகளை நிர்ணயம் செய்து வருகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் உற்பத்தி, விலை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, உள்ளூர் சந்தையில் காஸ் சிலிண்டருக்கான சந்தைத்தேவை, உற்பத்தித்திறன் உள்ளிட்ட காரணிகள் விலை நிர்ணயத்தில் முக்கிய பங்காற்றுகின்றன.
இந்நிலையில், ஈரான், சவூதி அரேபியா நாடுகளிடையே ஏற்பட்டுள்ள பனிப்போரால் கச்சா எண்ணெய் உற்பத்தி பெருமளவு குறைந்துள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை தாறுமாறாக எகிறியுள்ளது. இதன் தாக்கம் காஸ் சிலிண்டர் விலை வரை நீடிக்கிறது.
நடப்பு அக்டோபர் மாதத்தில், வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட மானியமில்லாத சமையல் காஸ் சிலிண்டர் விலை அதிரடியாக 13.50 ரூபாய் உயர்ந்து, 638.50 ரூபாயாக (சேலம் விலை) நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்த வகை சிலிண்டர் 625 ரூபாய்க்கு விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
அதேபோல, உணவகங்கள் உள்ளிட்ட வர்த்தக இடங்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட மானியமில்லாத காஸ் சிலிண்டர் விலையும் நடப்பு மாதத்தில் 24.50 ரூபாய் அதிகரித்துள்ளது. இதனால் நடப்பு அக்டோபரில் இதன் விலை 1160.50 ரூபாயாக (சேலம் நிலவரம்) நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதன் கடந்த மாத விலை 1136 ரூபாயாக இருந்தது.
நடப்பு அக்டோபரில், சென்னை சந்தையில் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை 620 ரூபாயாகவும், வர்த்தக காஸ் சிலிண்டர் விலை 1199 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.