கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே குரால் கிராமம் உளுந்தூர்பேட்டை - சேலம் சாலையை ஒட்டியுள்ளது அரசு ஆட்டுப் பண்ணை. இதன் அருகில்தான் குரால் கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சொந்த கிராமத்தைவிட்டு தனித்துவந்து வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் தங்கள் வசிப்பிடத்தில் இருந்து தங்கள் சொந்த ஊரான குரால் கிராமத்திற்கு செல்வதற்கும் தங்கள் பகுதியில் யாராவது இறந்தால் அவர்கள் உடலை அங்குள்ள சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லவும் அந்த வழியில் இருந்த பாதையை பயன்படுத்தி வந்துள்ளனர்.
இதற்கிடையே அந்த வழித்தட பாதையை அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் வருவாய்த்துறையில் கொடுக்க வேண்டியதை கொடுத்து பட்டா வாங்கிவிட்டதால் அந்த பாதையும் சேர்த்து கம்பி வேலி போட்டு ஆக்கிரமிப்பு செய்து கொண்டதாக கூறுகின்றனர். இதையடுத்து அந்த பகுதியில் உள்ள மக்கள் அரசுக்குச் சொந்தமான ஆட்டுப்பண்ணை வழியாக அருகிலுள்ள கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் மெயின் சாலைக்கும் சென்றுவந்து கொண்டிருந்தனர்.
அதேபோல் மயானத்திற்கும் அந்த வழியிலேயே சென்று வந்தனர். இதன் தூரம் ஆறு கிலோமீட்டர் சுற்றி வர வேண்டி இருந்தது. ஏற்கனவே நடைமுறையில் இருந்த பாதையை ஆக்கிரமிப்பு செய்துள்ள தனி நபர் ஒருவருக்கு நீதிமன்றத்தில் வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அதே பகுதியைச் சேர்ந்த 85 வயது சின்னப்பன் என்பவர் இறந்து விட்டார். அவரது உடலை குரால் கிராமத்திலுள்ள மயானத்திற்கு எடுத்துச் செல்ல முடியாமல் தவித்துள்ளனர்.
இதையடுத்து அப்பகுதி முக்கியஸ்தர்கள் வருவாய்த் துறை அதிகாரிகளிடம் இதுகுறித்து புகார் செய்தனர் இதையடுத்து சின்ன சேலம் தாசில்தார் வளர்மதி, வருவாய் ஆய்வாளர் காந்திமதி, போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை, தனிப்பிரிவு ஏட்டு மோகன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது இந்தமுறை மட்டும் ஆட்டுப்பண்ணை வழியாக இறந்தவர் உடலை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லுங்கள். விரைவில் உங்களுக்கு நிரந்தரமாக பாதை ஏற்படுத்தி தருவதற்கு தீர்வு காணப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனால் அப்பகுதி மக்கள் ஒவ்வொரு முறையும் அதிகாரிகள் இப்படித்தான் கூறுகின்றனர். பிறகு கண்டுகொள்வதில்லை எங்களுக்கு பாதை அமைத்துத் தர வேண்டும் என்பதை மறந்து விடுகிறார்கள்.
எங்களுக்கு நிரந்தரமாக பாதை அமைத்துத் தரும் வரை இறந்தவர் உடலை எடுத்துச்செல்ல மாட்டோம் என்று மறுத்துள்ளனர். இதனால் இரவு 8:30 வரை தீர்வு காண முடியாமல் அதிகாரிகள் திணறி உள்ளனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி ராமநாதன் தலைமையில் வருவாய்த்துறை மற்றும் போலீசார் பாதிக்கப்பட்டவர்களிடம் சென்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நாளை மாலை 4 மணி அளவில் கள்ளக்குறிச்சி சார் ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலையிட்டு இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தி உங்களுக்கு பாதை கிடைப்பதற்கு தீர்வு காண்பார் என உறுதியளிக்கப்பட்டது. அதையடுத்து இரண்டு நாட்களுக்கு பிறகு இறந்தவர் உடலை ஆட்டுப்பண்ணை வழியாக மயானத்திற்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்துள்ளனர் அப்பகுதி மக்கள்.