![Do you want a solution or a problem?-Judge questions to NLC](http://image.nakkheeran.in/cdn/farfuture/Pl1XqcRBQD1e_i0EYUA5lxDAexLp7cnj58v9oOlqC-c/1691500719/sites/default/files/inline-images/a929_1.jpg)
ஊதிய உயர்வு உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திக் கடந்த 26 ஆம் தேதி முதல் என்.எல்.சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நெய்வேலியில் உள்ள என்.எல்.சி தலைமை அலுவலகம் முன்பு ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் இரவு பகலாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், என்.எல்.சி நிர்வாகம் கடலூர் மாவட்ட காவல்துறைக்கு அண்மையில் கடிதம் ஒன்றைக் கொடுத்தது. அதில் போராட்டக்காரர்களை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை என்.எல்.சி நிர்வாகம் வைத்திருந்தது.
இந்நிலையில், என்.எல்.சி முன்பு போராட்டம் நடத்த அனுமதிக்கக் கூடாது எனவும், பணிக்கு வரும் ஊழியர்களுக்கு மற்றும் என்.எல்.சி நிறுவனத்திற்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என என்.எல்.சி தரப்பில் அவசர வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மூன்றாம் தேதி நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. தொழிற்சங்கம் சார்பில் முதலில் வாதங்கள் வைக்கப்பட்டது. கடந்த எட்டு நாட்களாக அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகிறோம் எனத் தெரிவித்தனர். என்எல்சி தரப்பில், 'குறிப்பிட்ட இடங்கள் மட்டுமல்லாமல் கார்ப்பரேட் அலுவலகம் எனும் தலைமை அலுவலகத்தின் முன்பே முற்றுகை போராட்டம் நடைபெறுகிறது' என்ற வாதத்தை வைத்தது.
![Do you want a solution or a problem?-Judge questions to NLC](http://image.nakkheeran.in/cdn/farfuture/t-RgF5JCkokKUdYvqKPqYjirEQGCcATzB-GzLk6vrrc/1691500759/sites/default/files/inline-images/b30_30.jpg)
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, 'சட்டத்தை உங்கள் கையில் எடுத்துக் கொண்டு அனுமதிக்கப்படாத இடத்தில், அதுவும் என்.எல்.சி கார்ப்பரேட் அலுவலகம் முன்பாகப் போராட்டம் நடத்துவதை அனுமதிக்க முடியாது. போராட்டம் நடத்துவதற்கான இடங்களைக் கடலூர் காவல்துறை எஸ்.பி நிர்ணயிக்க வேண்டும். நீதிமன்றத்தின் உத்தரவை மீறிச் செயல்பட்டு சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்துவோர் மீது சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கலாம்' என்று காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 8 ஆம் தேதி (இன்று) ஒத்தி வைத்திருந்தார்.
இந்நிலையில், இன்று மீண்டும் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையில், என்.எல்.சி ஒப்பந்தத் தொழிலாளர் விவகாரத்தில் தீர்வு காண விரும்புகிறீர்களா? அல்லது பிரச்சனையை விரும்புகிறீர்களா? என என்.எல்.சி நிர்வாகத்திற்குக் கேள்வி எழுப்பிய நீதிபதி, ஊழியர் போராட்டம் நடத்த வரையறுக்கப்பட்ட இடங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்ய கடலூரில் எஸ்.பிக்கு உத்தரவு பிறப்பித்தார். அறிக்கை தாக்கல் செய்யத் தவறினால் கடலூர் எஸ்பி நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டார். 'குறிப்பிட்ட இடங்களில் தான் தற்பொழுது போராட்டம் நடைபெற்று வருகிறது' என என்.எல்சி நிர்வாகம் தெரிவித்தது. தொடர்ந்து இருதரப்பும் கலந்து ஆலோசித்து ஆகஸ்ட் 11 ஆம் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, என்.எல்.சி நிர்வாகம் ஒப்பந்தத் தொழிலாளர்கள் இடையே பிரச்சனையைத் தீர்க்க உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ராமசுப்பிரமணியத்தை நியமிக்க உத்தரவிட்டார்.