தமிழகத்தில் கடந்த 24 ஆம் தேதி முதல் ஜூன் 7 வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் தற்போது வரை நடைமுறையில் உள்ளது. முழு ஊரடங்கின் பலனாக சில நாட்களாக தமிழகத்தில் கரோனோ ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை என்பது குறைந்து வருகிறது. ஆனால் உயிரிழப்பு என்பது மட்டும் குறையாத நிலையில், தமிழகத்தில் கரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கைகளை தமிழக அரசு மேலும் தீவிரப்படுத்தி வருகிறது.
தமிழகத்தில் 18 வயதிலிருந்து 45 வயதிற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்திற்கு உட்பட்ட காரைக்கால் மாவட்டத்தில் இளையான்குடி கிராமம் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்ட கிராமம் என்ற பெருமையை பெற்றுள்ளது. திருநள்ளாறு தொகுதிக்குட்பட்ட இளையான்குடி கிராமத்தில் உள்ள 45 வயதிற்கு மேற்பட்ட 64 நபர்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்து தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். அதன்படி காரைக்கால் மாவட்டத்தில் 100 விழுக்காட்டினர் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட முதல் கிராமமாக இளையான்குடி கிராமம் அறிவிக்கப்பட்டுள்ளது. திருநள்ளாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சிவா மற்றும் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா மற்றும் பல்வேறு அதிகாரிகள் இளையான்குடி கிராமத்திற்குச் சென்று பொதுமக்களை பாராட்டினார்.