திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் செட்டியபட்டி ஊராட்சிக்குட்பட்ட சிறுமலை அடிவார கிராமமான வேளாங்கண்ணி புரத்தில் தமிழ்நாடு பூமிதான வாரியம் மூலம் 33 பேருக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு கொடுக்கப்பட்டது. அவர்கள் அந்த இடத்தில் வீடு கட்ட முடியாமல் தவித்து வந்தனர். கடந்த 12 வருடங்களுக்கு முன்பு வருவாய்த்துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமியிடம் பட்டா கேட்டு கோரிக்கை மனு கொடுத்தனர். அவரும் உடனடியாக பூமிதான வாரியத்திற்கு அனுப்பி வைத்தார்.
அதிமுக ஆட்சியில் 10 வருடங்களாக அவர்களுக்கு எவ்வித அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். ஆனால் திமுக தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் மீண்டும் அதற்கான முயற்சியை மீண்டும் அமைச்சர் ஐ.பெரியசாமி எடுத்தவுடன் அவர்களுக்கு பட்டா வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. மேலும் வேளாங்கண்ணி புரத்தை சேர்ந்த கிராம மக்களுக்கு விநியோகம் செய்யும் ரேஷன் கடை பாதுகாப்பின்றி இருந்த நிலையில், அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் உத்தரவின் பேரில் பகுதி நேர நியாய விலை கடைக்கு புதிய கட்டிடம் கட்டிக் கொடுக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.
அதன்பின்னர் விழாவில் கலந்து கொண்டு 33 குடும்பங்களுக்கு பட்டா வழங்கி அவர்களை வாழ்த்தி பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, “பூமிதான வாரியத்தில் இருந்து பெற்ற இடங்களுக்கு பட்டா வழங்குவதில் பல்வேறு சிரமங்கள் இருந்தன. அவற்றை எல்லாம் சரி செய்து இன்று உங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப் பட்டுள்ளது. இதில் நீங்கள் விரைவில் கலைஞரின் வீடு வழங்கும் திட்டம் மூலம் வீடுகள் கட்ட தயாராக உள்ளது. இருக்க இடம், உடுக்க உடை, உண்ண உணவு, இந்த மூன்றையும் அடித்தட்டு மக்களுக்கு வழங்கி வருவது முத்தமிழ் அறிஞர் கலைஞர் வழியில் நல்லாட்சி செய்து வரும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு.
செட்டியபட்டியில் இருந்து வேளாங்கண்ணிபுரத்திற்கு வரும்போது சாலைகள் சேதமடைந்து இருப்பதை பார்த்தேன். விரைவில் அவர்களுக்கு முதலமைச்சரின் கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம் மூலம் சிறப்பான சாலை அமைய உள்ளது. இது தவிர இப்பகுதியை சேர்ந்த பொதுமக்களில் ஒரு சிலருக்கு முதியோர் உதவித்தொகை விடுபட்டுள்ளது என மனு கொடுத்துள்ளார்கள். விரைவில் அவர்களுக்கும் வீடு தேடி முதியோர் உதவித்தொகை வரும்.
திராவிட மாடல் ஆட்சி நாயகன் மு.க.ஸ்டாலின் அவர்களின் நல்லாட்சியில் பெண்களுக்கு வழங்கப்பட்ட மகளிர் உதவித்தொகை கிராமப்புற பெண்களின் வாழ்வாதரத்திற்கு உறுதுணையாக உள்ளது. இதுபோல கல்லூரி மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித்தொகை அவர்களின் மேற்படிப்பிற்கு பக்கபலமாக உள்ளது. இதன்மூலம் பெண்கள் உயர்கல்வி கற்கும் நிலை அதிகரித்துள்ளது என்றார். இப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் தேசிய நான்குவழிச்; சாலையில் உள்ள தடுப்பை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். விரைவில் அந்த தடுப்பை அகற்றி பொதுமக்கள் சிரமமின்றி செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். ஊராட்சி மன்றதலைவர் டி.ராஜா இளைஞராக இருந்தாலும் மக்கள் நலனுக்கான பணியில் அக்கறையோடு செயல்படுகிறார். அவருக்கு எனது பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.