கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் காலியாகவுள்ள 259 பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு, கடந்த 13.3.2020 அன்று நிறுவன இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதற்கு 1.5 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், அந்நிறுவனம் நேர்முகத் தேர்வுக்கு தேர்வானவர்கள் 1,582 பேர் என 30.01.2021 அன்று நிறுவன இணையத்தில் பட்டியல் வெளியிட்டது. இந்த 1,582 பேரில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் வெறும் 8 பேர் மட்டுமே தேர்வாகியுள்ளனர்.
என்.எல்.சி நிறுவனத்தின் இந்தத் தமிழர் விரோத போக்கிற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பல்வேறு தமிழ் அமைப்புகளும், பொதுநல அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் நெய்வேலி பெரியார் சிலை அருகில் ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் வெ.கணேசன் எம்.எல்.ஏ, நெய்வேலி சபா.இராசேந்திரன் எம்.எல்.ஏ, புவனகிரி சரவணன் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசுகையில், "என்.எல்.சி இந்தியா நிறுவனம் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக இருந்து வருகிறது. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமானோர் என்.எல்.சி நிறுவனத்தின் வளர்ச்சிக்காக தங்கள் வீடு, நிலங்களைக் கொடுத்து என்.எல்.சி நிறுவனம் நவரத்னா அந்தஸ்து பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளனர். என்.எல்.சி நிறுவனத்தில் தொடர்ந்து கடந்த ஜந்து ஆண்டுகளாக வடமாநில இளைஞர்களைப் பணியில் அமர்த்தி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது நடைபெற்ற பொறியாளர்கள் நேர்முகத் தேர்வில் 1,582 பேர் கலந்துகொண்டனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 8 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. என்.எல்.சி நிறுவனம் கேட் தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும். அதில் தமிழக இளைஞர்களுக்கு 50% சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். மத்திய அரசின் அடிமையாக எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார். என்.எல்.சி இந்தியா நிறுவனத்தினால் வெளியேற்றப்படும் புகையால் சுற்றுப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கும், என்.எல்.சி ஊழியர்களுக்கும் சிறுநீர் மற்றும் நுரையீரல் பாதிப்பு, புற்றுநோய் உள்ளிட்ட வியாதிகள் ஏற்படுகிறது. இதற்குக் காரணம் என்.எல்.சி நிறுவனம். என்.எல்.சி நிறுவனத்தில் பயிற்சி முடித்த அப்ரண்டிஸ் தொழிலாளர்கள், என்எல்சி நிறுவனத்துக்கு வீடு, நிலம் கொடுத்த தொழிலாளர்கள், பணியின்போது இறந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
மேலும் சுற்றுப்புற கிராம மக்கள் மற்றும் நெய்வேலியில் உள்ள தொழிலாளர்கள் அல்லாதவருக்கு மருத்துவ வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். தற்போது நடைபெற்ற பொறியாளர் தேர்வை என்.எல்.சி நிர்வாகம் உடனடியாக ரத்து செய்யாவிட்டால், அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள், தொழிற்சங்கத்தினர் உள்ளிட்ட அனைவரும் ஒருங்கிணைந்து என்.எல்.சி நிறுவனத்திற்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் மற்றும் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்படும்" என்றார். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏக்கள் இள.புகழேந்தி, ஐயப்பன், தொ.மு.ச பேரவை இணைப்பொதுச் செயலாளர் சுகுமார், துணை செயலாளர் வீர.ராமச்சந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் ராசவன்னியன் மற்றும் அணி நிர்வாகிகள், என்.எல்.சி அப்ரண்டிஸ் தொழிலாளர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.