Skip to main content

''தமிழ்நாட்டை திமுக நிரந்தரமாக ஆளவேண்டும்; அதற்கு வேலை செய்யுங்கள்'' - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு

Published on 17/08/2023 | Edited on 17/08/2023

 

 'DMK should rule Tamil Nadu permanently' - M. K. Stalin's speech

 

தென் மாவட்ட திமுக வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

 

மேடையில் முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் பேசுகையில், ''தமிழ்நாட்டை திமுக மீண்டும் ஆள வேண்டும் என கலைஞர் கனவு கண்டார். அந்த கனவை நிறைவேற்றி விட்டோம். தமிழ்நாட்டை திமுக தான் நிரந்தரமாக ஆள வேண்டும் என்று கலைஞர் கனவு கண்டார். அந்த கனவையும் நிச்சயமாக நிறைவேற்றிக் காட்டுவோம். திராவிட இயக்கத்தின் கொள்கைகளை இந்தியா முழுமையாக பரப்ப வேண்டும் என்பது நம்முடைய கலைஞரின் கனவு. தமிழ்நாட்டின் சீர்திருத்தச் சட்டங்கள் இந்தியாவின் சட்டங்களாக மாற வேண்டும் என கலைஞர் நினைத்தார். அந்த கனவையும் நாம் நிறைவேற்றிக் காட்ட வேண்டிய காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதற்கான மாநாடு தான் இது. அதற்கான  தளபதிகள் தான் நீங்கள்.

 

கடந்த 22/3/2023 அன்று என்னுடைய தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்பொழுது இரண்டு முக்கியமான தீர்மானங்களை நிறைவேற்றினோம். கலைஞருடைய நூற்றாண்டு தொடக்க விழாவை முன்னிட்டு திமுகவில் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்பது முதல் தீர்மானம். தமிழ்நாடு முழுக்க முழுமையாக பூத் கமிட்டி அமைக்கப்பட வேண்டும் என்பது இரண்டாவது தீர்மானம். உறுப்பினர்களை சேர்க்கும் பணி வெற்றிகரமாக முடிந்தது. ஒவ்வொரு வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழ்நாடு முழுக்க 68 ஆயிரத்து 36 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இரண்டு கோடி தொண்டர்களைக் கொண்ட நம்முடைய திமுகவில் நீங்கள் அந்த 68 ஆயிரத்தில் ஒருவர்.

 

வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பட்டியல் தலைமை கழகத்தால் முழுமையாக சரிபார்க்கப்பட்டிருக்கிறது. இவர்களுக்கான பயிற்சிகள் உடனே தொடங்க வேண்டும் என முடிவெடுத்து  டெல்டா மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சி பாசறை கூட்டம் கடந்த ஜூலை 26 அன்று தீரர்கள் கோட்டமான திருச்சியில் நடைபெற்றது. கே.என்.நேருவின் முயற்சியால் வழக்கம் போல பிரம்மாண்டமாக நடந்தது. அடுத்ததாக மிக பிரம்மாண்டமாக தென்மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் இந்த ராமநாதபுரத்தில் நடைபெற்று வருகிறது. 19 மாவட்ட கழகங்களைச் சார்ந்த வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் 16,978 பேர் இங்கு வந்துள்ளீர்கள். உங்களை அழைத்து வந்த மாவட்டச் செயலாளர்கள் அனைவருக்கும் எனது நன்றி. பின்தங்கிய மாவட்டமாக இருந்த ராமநாதபுரத்தை முன்மாதிரி மாவட்டமாக்கியது திமுக அரசு. பல ஆண்டுகளாக ஓடாமல் இருந்த ராமநாதசுவாமி கோயில் தேரை ஓட வைத்தது திமுக அரசு தான். இவை எல்லாவற்றையும் மனதில் வைத்து நீங்கள் செயல்பட வேண்டும். இந்த பயிற்சி இந்த தேர்தலுக்கு மட்டும் அல்ல. எந்த தேர்தல் வந்தாலும் பயன்படக்கூடிய பயிற்சி.

 

வாக்குச்சாவடி பொறுப்பாளர் என்றால் நாடாளுமன்ற வெற்றிக்கும் நீங்கள்தான் பொறுப்பாளர். 'நாற்பதும் நமதே நாடும் நமதே' என்று நான் சொல்வது உங்கள் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையில் தான். இன்று முதல் திமுக தேர்தல் பொறுப்பாளர்கள் என்று கம்பீரத்துடன் கடமையாற்ற வேண்டும். வெற்றி ஒன்றே உங்களது இலக்காக அமைய வேண்டும். உங்களுக்கு நிறைய கடமைகள் இருக்கிறது. அதில் வாக்காளர் பட்டியலை சரி பார்ப்பது தான் முதல் பணி. இரண்டாவது பணி வாக்காளர்களுக்கான விவரங்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா; போலி வாக்காளர்கள் இருக்கிறார்களா; இறந்தவர்கள் பெயரை நீக்கியாச்சா என முழுமையாக சரி பார்க்க வேண்டும். தினமும் ஒரு மணி நேரத்தை பூத் வேலைக்காக ஒதுக்குங்கள். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் உங்களால் ஒதுக்க முடியாதா?. அரசு திட்டங்களையும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

 

நமக்கு எதிராக அவதூறுகளையும் பொய்களையும் பரப்ப ஒரு சிறு நரி கூட்டம் சுற்றிக் கொண்டிருக்கிறது. பொய்களுக்கு ஆயுள் ரொம்ப குறைவு. அவர்கள் பொய்யே சொல்லிக் கொண்டிருக்கட்டும். நாம் திரும்பத் திரும்ப திட்டங்களைப் பற்றி பேசுவோம். இதில் எதிரிகள் பரப்புகின்ற அவதூறுகள் சுக்கு நூறாக உடைந்திடும்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்