மக்களிடம் செல்வோம் - மக்களிடம் சொல்வோம் - மக்களின் மனங்களை வெல்வோம் என்ற மூன்று முத்தான முழக்கங்களை முன்வைத்து, நம்முடைய செயல்பாடுகள் இனி அமையவேண்டும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்களில் ஊராட்சி சபைக் கூட்டங்களை நடத்த வேண்டும் என திமுக நிர்வாகிகளுக்கும், திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வேண்டுகோள் விடுத்தார். ஜனவரி 9-ம் தேதி அன்று தொடங்கி பிப்ரவரி 17-ம் தேதி வரை தமிழ்நாட்டில் உள்ள 12,617 ஊராட்சிகளிலும் திமுக சார்பில் ஊராட்சி சபைக் கூட்டங்கள் நடைபெறும் என திமுக தலைமைக் கழகம் சார்பாக அறிவிக்கப்பட்டது. அதன்படி ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலமரத்துப்பட்டி ஊராட்சி, ஆலமரத்துப்பட்டி கிராமத்தில் ஊராட்சி சபைக்கூட்டம் கிராம மைதானத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு ஊராட்சி அவைத் தலைவர் துரைராஜ் தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவி நளினி ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் இராஜேந்திரன் வரவேற்றுப் பேசினார். கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஆத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினரும், திமுக மாநில துணைப் பொதுச்செயலாளருமான இ.பெரியசாமி பேசும்போது, முத்தமிழ் அறிஞர் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் ஆட்சியின் போது உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது தமிழக கிராமங்கள் அடைந்த வளர்ச்சி, சரித்திர சாதனை படைத்தது. ஆனால் கடந்த 3 வருடங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் தமிழகத்தில் உள்ள கிராமங்கள் மீண்டும் பழைய நிலைமைக்கு சென்றுவிட்டன. கிராமங்களில் தண்ணீர் வசதி, மின்விளக்கு, சாலை வசதி இல்லாமல் பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் கடும் சிரமப்படுகின்றனர். ஆத்தூர் தொகுதியில் மட்டும் சுமார் 8 ஆயிரம் முதியோர்களுக்கு முதியோர் உதவித்தொகையை நிறுத்தி விட்டனர். நாங்கள் ஆதாரத்துடன் மீண்டும் அவர்களுக்கு வழங்க வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளோம் விரைவில் அவர்களுக்கு உதவித்தொகை கிடைக்கும் என்றார். கலைஞர் அவர்களின் ஆட்சியில் கொடுக்கப்பட்ட இலவச டி.வி, இலவச எரிவாயு அடுப்பு, இலவச சைக்கிள் ஆகியவற்றை 10 வருடங்களாகியும் பொதுமக்கள் இன்றுவரை பயன்படுத்துகின்றனர். ஆனால், கடந்த 2 வருடங்களுக்கு முன்பு அதிமுக அரசால் வழங்கப்பட்ட இலவச மிக்சி, கிரைண்டரை ஒரு வீட்டில் கூட பார்க்க முடியாது.
தரமற்ற பொருட்களை வழங்கிய இந்த ஆட்சி தரமில்லாத ஆட்சியாக உள்ளது. மத்தியில் ஆளும் மோடி அவர்கள் ஆட்சியை பிடிக்கும் முன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.15 லட்சம் வங்கிக் கணக்கில் செலுத்திவிடுகிறேன் என வாய் ஜாலம் பேசி ஆட்சியைப் பிடித்தார். ஆனால் அவர் ஆட்சியில் தொடர்ந்து விலைவாசி உயர்ந்துகொண்டே வருகிறது. பெட்ரோல் விலை, வரலாறு காணாத விலையாக உள்ளது என்றார். திமுக ஆட்சிக்காலத்தில் பருப்பு, உளுந்து உள்ளிட்ட மளிகை சாமான்களுக்கு திடீர் தட்டுப்பாடு ஏற்பட்ட போது தலைவர் கலைஞர் அவர்கள் ரூ.50க்கு மளிகை சாமான்கள் அடங்கிய கிப்ட் பேக்கினை நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கி மக்களின் குறைகளை உடனே தீர்த்து வைத்தார். ஆனால் இன்று லஞ்சம் வாங்குவதே குறிக்கோளாக செயல்படும் அதிமுக அரசு மக்களைப் பற்றி கவலைப்படவில்லை. விரைவில் தமிழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைவது உறுதி என்று கூறினார்.
அதைத் தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் ஊராட்சி பகுதியில் முறையான குடிதண்ணீர் வசதி செய்யவில்லை. தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை எனவும் புகார் செய்ததோடு, ஆலமரத்துப்பட்டி பிரிவில் பயணிகள் நிழற்குடை வேண்டும் என்றும், அண்ணாமலையார் மில் அருகே ஹைமாஸ் விளக்குகள் வேண்டும் என்றும் கேட்டு மனு கொடுத்தனர். கூட்டத்தில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் தண்டபாணி, ரெட்டியார்சத்திரம் ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் கு.சத்தியமூர்த்தி, ஆத்தூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் பிள்ளையார்நத்தம் முருகேசன், ஒன்றிய அவைத்தலைவர் வீரைய்யா, பொருளாளர் லட்சுமணன், ஒன்றிய துணை செயலாளர்கள் எம்.சி.பாண்டி, ஆலமரத்துப்பட்டி ரவிச்சந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் ஆரியநல்லூர் தங்கவேல், செட்டியபட்டி பவுன்ராஜ், பிள்ளையார்நத்தம் ஊராட்சி முன்னாள் துணை தலைவர் எஸ்.நாராயணசாமி, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜகணேஷ், ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர் அருண்குமார், வார்டு செயலாளர்கள் மன்மதன், பூபதி ராஜ்குமார், புருஷோத்தமன், மரிய சுந்தர்ராஜ், காளாஸ்திரி, பிச்சைக்காளை, தயாளன், பொம்மையசாமி, உட்பட திமுக நிர்வாகிகள், பொதுமக்கள், இளைஞரணியினர் பலர் கலந்துகொண்டனர். நிறைவாக ஒன்றிய துணை செயலாளர் ஜி.ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.