ஈரோடு மாவட்ட திமுக செயலாளராக இருப்பவர் முன்னாள் அமைச்சர் சு.முத்துசாமி. இவரது துணைவியார் இன்று காலை காலமானார். தொடர்ந்து திமுகவின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று முத்துசாமியின் துணைவியார் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இதன் பின்னர், முத்துசாமி தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள நெடுங்குளம் கிராமத்திற்கு தனது மனைவியின் உடலை கொண்டு வந்தார்.
முத்துசாமி, ஆரம்ப காலத்தில் இருந்து அதிமுகவில் இருந்தவர். இதனால் அதிமுகவில் உள்ள பல முக்கிய நிர்வாகிகள் முத்துசாமியின் துணைவியார் இறப்புக்கு அஞ்சலி செலுத்த நெடுங்குளம் கிராமத்திற்கு வந்துள்ளனர். அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், தங்கமணி ஆகியோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்திவிட்டு சென்ற நிலையில், நாளை ஏப்ரல் 15ம் ம்தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் நேரில்வந்து அஞ்சலி செலுத்துவதாக கூறியிருக்கிறார். அதிமுகவில் இப்போது உள்ள நிர்வாகிகளில் சு.முத்துசாமி சீனியர் ஆவார். மேலும், எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருங்கிய உறவினர்தான் முத்துசாமி.
எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த கிராமமான சிலுவம்பாளையம், நெடுங்குளம் கிராமத்தை ஒட்டியே உள்ளது. இந்த பின்னணியில்தான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக மாவட்ட செயலாளர் முத்துசாமி இல்லத்திற்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்துகிறார்.
திமுக மாவட்ட செயலாளரின் வீட்டிற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி செலுத்த செல்லும் தகவல் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.