
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது தொடர்பாக மத்திய பாஜக அரசை கண்டித்து ஏப்ரல் 5ந்தேதி தமிழகத்தில் முழு பந்த் நடைபெற்றது. தமிழகத்தை ஆளும் அதிமுக இந்த பந்த்தில் கலந்துக்கொள்ளவில்லை. அதோடு பந்த்தை தோல்வியடைய வைக்க பேருந்துகளை இயக்கியது. அப்படி இயக்கப்பட்ட பேருந்தை ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் 54 வயதான தேவயாணி என்கிற தெய்வநாயகி திமுக கொடியுடன் சென்று தடுத்து நிறுத்தினார். அந்த பாட்டியின் வீரத்தை அறிந்த திமுக செயல்தலைவர் ஸ்டாலின் இன்று அவரை சென்னைக்கு அழைத்து பாராட்டினார்.
இதுதொடார்பாக தேவயானி என்கிற தெய்வநாயகியை நாம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியபோது, ஆம்பூர் நகரத்தில் உள்ள நரசிங்கபுரம் பகுதியில் குடியிருக்கன். என் கணவர் இறந்துட்டார். எனக்கு 2 மகன், 2 மகள்ன்னு 4 பிள்ளைகள். கால்நடை மேய்ச்சல், கூலி வேலை செய்துதான் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கினோம். திமுகன்னா எனக்கு உயிர், கட்சியில் உறுப்பினரா இருக்கன். திமுகவின் அனைத்து போராட்டங்களிலும் கலந்துக்கொள்வேன். அப்படித்தான் காவிரி வாரியம் அமைக்காததை கண்டித்து நடைபெற்ற போராட்டத்திலும் கலந்துக்கொண்டேன், பந்த் நடக்கும்போது பேருந்து இயங்கியதால் தடுத்து நிறுத்தினேன்.
அதற்காக தளபதி அழைக்கிறார் என்றதும் இன்று தளபதியை சந்திக்க அழைத்து வந்தார்கள். தளபதியை சந்தித்தபோது, வீரமா செயல்பட்டிங்கன்னு சொல்லி பாராட்டினார். ரொம்ப சந்தோஷமா இருந்தது என்றார்.
திமுக தரப்பில் இருந்து அவரை பலரும் பாராட்டி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.