Skip to main content

பணி வழங்குவதில் மருத்துவர்களிடையே தகராறு; இணை  இயக்குநர் விசாரணை!

Published on 06/06/2023 | Edited on 06/06/2023

 

Dispute among doctors over appointment in Dharmapuri

 

தர்மபுரி மாவட்டம் அரூர் அரசு மருத்துவமனையில் நாள்தோறும் சுமார் 1000க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். இந்த மருத்துவமனையில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய தாய் சேய் அவசர  சிகிச்சை மையம், குடும்ப நலக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை, பிரசவ கால அறுவை சிகிச்சை, அதேபோல் ரத்தப் பரிசோதனை, ஸ்கேன் எக்ஸ்ரே, தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்திலும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

 

இந்த மருத்துவமனையை மையப்படுத்தி அரூர், மொரப்பூர் பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர், தீர்த்தமலை, சித்தேரி உள்ளிட்ட பகுதிகளில் வாழும் மக்கள் இந்த மருத்துவமனைக்கு வருகை தருவதால் நோயாளிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் அரூர் அரசு மருத்துவமனையில் 19 மருத்துவர்கள்  பணியாற்றி வருகிறார்கள். இதில் பத்துக்கும் குறைவான மருத்துவரே நாள்தோறும் சுழற்சி முறையில் பணியில் உள்ளதாகவும், மருத்துவர்கள்  பற்றாக்குறையால் நாள்தோறும் காலை நேரங்களில் 9 மணிக்குப் பிறகு அரசு மருத்துவர்கள் மருத்துவமனைக்கு வருகை தருவதாக நோயாளிகள் புகார் கூறுகின்றனர். 

 

இந்நிலையில் இன்று மருத்துவமனையில் பணி வழங்குவதில் இரு  மருத்துவர்கள் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அரூர் மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் ஒரு குறிப்பிட்ட ஐந்து மருத்துவர்களுக்கு மட்டுமே தொடர்ந்து பணி வழங்குவதாகவும், அவர்கள் ஐந்து பேரும் ஒரே சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்குப் பணி வழங்குவதாக மருத்துவர் ஒருவர் மருத்துவ அலுவலர் ராஜேஷ்  கண்ணனிடம் கேட்டதாகவும், நான் அப்படிதான் பணி வழங்குவேன்., உன்னால் முடிந்ததைப் பார்த்துக்கொள் என்று வாய் தகராற்றில் ஈடுபட்டதாகத் தெரிய வருகிறது. பாதிக்கப்பட்ட மருத்துவர் இது குறித்து தர்மபுரி மாவட்ட இணை  இயக்குநர் சாந்தி அவர்களுக்கு புகார் மனு கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் இணை இயக்குநர் சாந்தி, தகராற்றில் ஈடுபட்ட  மருத்துவர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.

 

இது தொடர்பாக இணை இயக்குநர் சாந்தி கூறுகையில், “இது சம்பந்தமாக விசாரணை செய்ததாகவும் விசாரணையின் அறிக்கையை தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு சமர்ப்பிப்பதாகவும்  மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தர்மபுரி ஆட்சியர் முடிவு செய்வார்” என்று தகவல் அளித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்