Skip to main content

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு; திருவாரூர் ஆட்சியரிடம் இயக்குநர்கள் மனு

Published on 23/08/2021 | Edited on 23/08/2021

 

 Agricultural Cooperative Society; Directors petition to Thiruvarur Collector

 

திருவாரூர் அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கத்தில் முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூட்டுறவுச் சங்க இயக்குநர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

 

கடந்த ஆட்சியில் நகை மற்றும் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ததில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றிருப்பதாக தமிழகம் முழுவதும் விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். விவசாயிகள் பெயரில் விவசாயிகள் அல்லாதோரும், நிவாரணம் பெற்றிருப்பது உட்பட பல்வேறு ஊர்களில் முறைகேடுகள் குறித்து ஆதாரங்களோடு அதிகாரிகளிடம் நடவடிக்கை எடுக்க கோரி மன்றாடிவருகின்றனர்.

 

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம், தப்பளாம்புலியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கத்தில் கடந்த ஆண்டில் தமிழக அரசு தள்ளுபடி செய்த நகைக்கடன் மற்றும் பயிர்க் கடன்களில் விவசாயிகள் பெயரில் விவசாயிகள் அல்லாதோர் பயன் பெற்றதாகவும், கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து போலியான சிட்டா மற்றும் அடங்கல் வழங்கி மோசடி செய்துள்ளதாகவும்  அப்பகுதி விவசாயிகள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்தது. இதுகுறித்து ஆதாரங்களோடு கூட்டுறவு வங்கி இயக்குநர்கள் புகார் கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கையாக ஆட்சியரைச் சந்தித்து மனுகொடுத்துள்ளனர்.

 

"உடனடியாக தமிழக அரசு முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையெனில் போராட்டம் செய்வோம்" என்கின்றனர் திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனுகொடுத்துள்ள தப்பளாம்புலியூர் கூட்டுறவுச் சங்க இயக்குநர்களான விஜயலட்சுமி மணிவேலு மற்றும் தண்டபாணி.
 

 

சார்ந்த செய்திகள்