கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வனப் பகுதிகளை ஒட்டியுள்ள கிராமங்களில் காட்டு யானைகள் புகுவது தொடர்ந்து நடைபெற்று வரும் நிகழ்வுகளில் ஒன்றாகும். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக இடம்பெயர்ந்து தஞ்சம் புகுந்துள்ளதால் கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது வனத்துறை.
சானமாவை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளுக்கும் தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளது வனத்துறை. 20க்கு மேற்பட்ட காட்டு யானைகள் இன்று அதிகாலை சானமாவு வனப்பகுதிக்கு வந்து சேர்ந்தது. இதன் காரணமாக பீர்ஜெபள்ளி, நாயகன்பள்ளி உள்ளிட்ட சிற்றூர்களைச் சேர்ந்த மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பனிமூட்டம் அதிகம் காணப்படும் நேரத்தில் யானைகள் கண்களுக்கு தென்படாது என்பதால் வெளிச்சம் நன்றாக வந்த பிறகு வெளியே செல்லுமாறு பொதுமக்களுக்கு வனத்துறை அறிவிப்பு விடுத்துள்ளது. அதேபோல் விவசாய தோட்டங்களில் இரவு நேரங்களில் காவல் காக்கச் சென்றால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது வனத்துறை.