திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களின் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. இதனை பேரூராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறை கண்டு கொள்ளாததால் குட்கா புகையிலை பொருட்கள் வத்தலக்குண்டில் தாராளமாக கிடைக்கின்றன.
இந்நிலையில் வத்தலக்குண்டில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக திண்டுக்கல் உணவு பாதுகாப்பு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் நடராஜன் தலைமையில் வத்தலக்குண்டு கெங்குவார்பட்டி சாலையிலுள்ள புதுப்பட்டி என்ற இடத்தில் சுல்தான் என்பவருக்கு சொந்தமான மாவு அரவை மில்லில் சோதனை நடத்தினர். இதில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 கிலோ எடை கொண்ட ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட மூன்று வகையான குட்கா புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் வத்தலக்குண்டு மெயின் ரோட்டில் பல சரக்கு கடை வைத்திருக்கும் சையது என்பவர் தனது உறவினர் சுல்தான் நடத்தி வரும் மாவு அரவை மில்லில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.